Friday, January 29, 2010

நெடுங்குருதியும் குற்றப்பரம்பரை சட்டமும்

நெடுங்குருதி எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய நாவல் . எஸ்.ரா விருதுநகர் மாவட்டம் மல்லன்கிணறு கிராமத்தில் பிறந்து தற்போது சென்னையில் வசிந்து வருகிறார் . முதலில் எஸ் . ரா எழுத்துக்கள் எப்படி எனக்கு அறிமுகம் ஆகியது என்றால் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய "துணை எழுத்து " தொடராக வந்து கொண்டு இருந்தது . அதை படிக்க ஆரம்பித்த பின்பு அவரது எழுத்துக்கள் மிகவும் பிடித்து விட்டன. எந்த அளவுக்கு என்றால் ஆனந்த விகடன் வாங்கியதும் முதலில் துணை எழுத்து படிக்கும் அளவுக்கு . அதன் பின்பு அவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்களை படித்தாலும் அது துணை எழுத்து அளவுக்கு ஒட்டவில்லை .அதன் பின்பு அவருடைய நெடுங்குருதி நாவல் பற்றி நிறைய பேர் சொன்னதும் , இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி படித்து முடித்தேன் .

நெடுங்குருதி வேம்பலை என்னும் கற்பனை கிராமத்தில் வாழும் வேம்பர்கள் பற்றிய கற்பனை கதை . வேம்பர்கள் வெள்ளையர்களின் காலத்தில் குற்ற பரம்பரை சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டவர்கள் .


குற்ற பரம்பரை சட்டம் என்பது என்ன என்றால் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களால் சந்தேகிக்கப்படும் மக்களின் பெரு விரல் கை ரேகையை பதிந்து சென்று விடுவார்கள் .இப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் இரவு நேரங்களில் கச்சேரி என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மாடுகள் அடைத்து வைக்கப்படும் இடம் போன்ற ஒரு இடத்திற்கு மாலை 6 மணி ஆனதும் இந்த மக்கள் சென்று விட வேண்டும் .கச்சேரியில் இருப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது .கச்சேரியில் தூங்க இடம் இருக்காது . இரவு முழுவதும் உட்கார்ந்தபடியே தான் இருக்க வேண்டும் . விடியும் வரை அங்கே இருந்து தான் அந்த இரவில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் தான் வாழ்நாள் முழுவதும் . இந்த சட்டத்தால் 15 வயது முதல் உள்ள ஆண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் கச்சேரியில் அடைந்து மானம் இழந்து வாழ விரும்பாமல் தான் பெரு விரலை வெட்டி கொண்டவர்கள் நிறைய பேருண்டு .அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அந்த சட்டத்தை தூக்க செய்தனர் .முதலில் நெடுங்குருதி படிக்க ஆரம்பித்தும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சென்றது . சில பக்கங்கள் வாசிச்சதும் கதை தான் ஓட்டத்தின் வழியே இழுத்து சென்றது .நானும் ஆற்று தண்ணிரில் அடிது செல்லப்படும் இல்லை போன்று அதன் கூடவே சென்றேன் . இது வேம்பலையில் வாழும் நாகு குடும்பம் மற்றும் நாகுவை சுற்றியே வருகிறது . வேம்பலை போன்ற ஒரு வெயிலின் வெக்கை ஆட்சி செய்யும் கிராமத்தின் கதையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .

வேம்பர்கள் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தால் அடக்கப்படுகிறார்கள் அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற விடயங்கள் நம்மை 70 வருடங்களுக்கு பின்னாலே இழுத்து செல்கிறது .

கிராமங்களுக்கே உரிய முயல் வேட்டை பற்றிய பகுதிகள் சிறு வயதில் நான் முயல் வேட்டைக்கு சென்றதை நினைவுப்படுத்தியது .

இப்படி விறுவிறுப்பாக செல்லும் நாவல் அடுத்த தலைமுறையினர் குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது . நாவலின் இறுதி பகுதிகள் நாவலை எப்படியாவது முடிக்க வேண்டும் என சவ்வு மாதிரி இழுக்கப்பட்டு திடீர் என்று முடிக்கப்பட்டது போல் உள்ளது .

இந்த நாவலின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேம்பலை தன் மக்களின் குருதியை ருசி பார்த்துகொண்டே இருக்கிறது .பொதுவாக சிறு நிலங்களின் வரலாறுகள் பதிவு செய்யப்படுவது இல்லை . அப்படி பதிவு செய்தது பல விடயங்களை வெளிக்கொண்டு வந்து உள்ளது இந்த நாவல் . எப்படி இருப்பினும் நெடுங்குருதி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு பற்றி தமிழ் எழுத்து உலகில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று .

Sunday, January 24, 2010

ஹோசானா


உன்னை மறுபடியும் நினைக்க
வைத்த ஹோசானா பாடலை

பண்பலையில் தேடித் தேடி
தேய்ந்த விரல்கள்

கடற்கரை முழுதும் தேய்ந்து போன
என் காலடி தடங்கள்

கடல் காற்றின் உப்பையும் ஈரத்தையும்
மிஞ்சிய என் காதல்

அலையின் சத்தத்தை மீறி கேட்ட
என் இதய துடிப்பு

என்ன என்று கேட்டால் உன்னை
பார்க்க வேண்டும் என்கின்றது
முதன் முதலில் பார்த்தேன்

தினம் தினம் உன்னை
பார்க்க வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் பார்த்தேன் உன்னுடன்
வாழ வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் வாழ்ந்தேன்
தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றியது

சும்மாவா

தினம் தினம் நல்ல சமைச்சும்
வசவு வாங்கிறது உன்கிட்ட

கி ரா பக்கங்கள்

கி . ரா என்று அழைக்கப்படும் கி . ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவலை சேர்ந்தவர் . தற்சமயம் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கரிசல் இலக்கியத்தின் இவரது பங்களிப்பு ரெம்ப முக்கியமானது . இவரது எழுத்துக்களை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது கீற்று தளம் ஆகும் . அதில் இவரது எழுத்துக்கள் எனக்கு பிடித்து போனது . அதன் பின்பு நான் வாசித்த இவரது "கோபல்ல கிராமத்து மக்கள் " கிட்டத்தட்ட நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்தது .இதன் காரணமாக அவரது எழுத்துகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின .அதன் பின்பு இந்த வருடம் நடந்த புத்தக கண்காட்சியில் அவரின் கரிசக்காட்டு கடுதாசி வாங்கி படிக்க ஆரம்பித்தேன் . அதில் வந்த சில சுவாரசியமான விடயங்களை இந்த பதிவில் தொகுத்து உள்ளேன் ..


காபி வில்லை :

10 வருடங்களுக்கு முன்பு கூட நமது கிராமங்களில் "நீத்தண்ணி" காலையில் எழுந்து குடிக்கும் பழக்கம் இருந்தது . இது எதற்காக என்று பாத்தால் காலையில் எழுந்து இதை குடிப்பதால் உடல் சுடு குறைகிறது . ஆனால் இன்று நீத்தண்ணி குடிப்பது மறைந்து காலையில் என்திச்சதும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது . இது தானாக வரவில்லை நம்மிடம் புகுத்தப்பட்டது . எப்படி முதலில் காபி நமக்கு அறிமுகம் ஆனது என்று பார்ப்போம் .


முதன் முதலாக காபியை நமக்கு அறிமுகமானபோது அது வில்லையாக அறிமுகப்படுத்தப்பட்டது . ஏன் என்று பாத்தால் அப்ப மக்களுக்கு எவ்ளோ போடா வேண்டும் என்று தெரியாது . அதனால் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு . அந்த காலத்தில் காபி ஒரு வீட்டில் குடிக்கிறார்கள் என்றால் அது சமுகத்தில் மதிப்பிற்கு உரிய விடயமாக கருதப்பட்டது . இப்படித்தான் படிப்படியாக எல்லோரும் தன குடும்ப மதிப்பை சமுதாயத்தில் காப்பாற்ற காபி குடிக்க ஆரம்பித்து இன்று அது காலை கடமைகளில் ஒன்றாக ஆகிப்போனது . அது போக விருந்தாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் காபியை மறுத்தாலோ அல்லது மிச்சம் வைத்தாலோ அது மரியாதையை குறைவான செயலாக கருதப்பட்டது .

இது போன்றுதான் நம்மிடம் இருந்த நல்ல உணவு வகைகளை எல்லாம் பின் தள்ளி நாம் சமுக மதிப்புக்காக அரிசி சார்ந்த உணவுகளை அதிகம் தின்று வருகிறோம் .

மோட்டார் வண்டி (பேருந்து ) :

அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் நடை பயணத்தில் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது . வெள்ளைக்காரன் காலத்தில் மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மோட்டார் வண்டி முதலாளிகள் எல்லாம் மக்களை மோட்டார் பயணத்திற்கு பழக்கப்படுத்த ரெம்ப தவிச்சு போய்ட்டாங்க. அதனால் அந்த காலத்தில் யாரவது வண்டி வேண்டும் என்று கேட்டல் வீடு தேடி வந்து அழைத்து போவார்களாம் . அது போக நடந்து போகும் மக்களிடம் வண்டியை நிப்பாட்டி வர்ரீங்களா என்று கேட்டு தான் மக்கள் இந்த மோட்டார் பயணத்துக்கு பழகினார்களாம் .

இன்று பேருந்துக்காக நாம் எப்படி அல்லல்படுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் .

சாப்பாடும் ஆயுளும் :


இது ஒரு கிராமத்து புனைவு என்றாலும் அதில் ஒரு அர்த்தம் இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான் . எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .

பானக்கரப்பம் :
இது ஒரு உடலுக்கு குளிர்ச்சி தரும் வீட்டிலயே செய்யப்படும் ஒரு பானம் ஆகும் . பானக்கரப்பம் என்பது மருவிய சொல்லாக இருக்கலாம் . பானையில் புளி மற்றும் கருப்பட்டிய தண்ணி ஊத்தி குறஞ்சது 6 மணி நேரங்கள் கழித்து நன்றாக அதை கலக்கி அதன் பின்பு குடித்தால் அவ்ளோ சுவையாக இருக்கும் .

எனக்கு மிகவும் பிடித்த பானம் இது . எனக்கு சென்ற வருடம் அம்மை போட்டு இருந்தப்ப தினம் தினம் பானக்கரப்பம் குடிப்பது உண்டு . எங்க குல சாமி கோவிலில் கொடை முடிந்ததும் எல்லோருக்கும் இது வழங்கப்படுவது உண்டு .

Friday, January 22, 2010

சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்

பண்டைய காலத்தில் வாணிகம் என்பது மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்பட்ட தொழில் . இன்று இருந்த போக்குவரத்து வசதிகள் அன்று கிடையாது . பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த சுமைதாங்கி கல் .

சுமை தாங்கி கல் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேல தரைக்கு இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .


திண்ணை கிராமத்து வீடுகளில் வீட்டின் முன்னால் உள்ள திண்டு போன்ற அமைப்பு ஆகும் .இது கிட்டத்தட்ட ஒரு ஆள் முதல் பல பேர் உறங்க வசதி உள்ள ஒரு திண்டு ஆகும் .


இதுவும் முன் பின் தெரியாத நடை பயணிகளுக்கு ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டது . ரெம்ப தூரம் பயணம் செய்யும் மக்களுக்கு அசதி ஏற்பட்டால் அவர்கள் இந்த திண்ணைகளில் அந்த வீட்டுக்காரரிடம் அனுமதி பெற்று ஓய்வு எடுத்து செல்லுவார்கள் .


இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நாம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது

Wednesday, January 13, 2010

நெல்லை பயண கட்டுரை

நெல்லை பயண கட்டுரைபொங்கலுக்கு போறதுக்கு அனந்தபுரி ரயிலில் டிக்கெட் போட்டு இருந்தேன் .. ஊருக்கு போறதுக்கு முன்னாலே சில சுவாரசியமான விடயங்கள் நடந்தது .அது பத்தி தான் இந்த பதிவு .

எழும்பூர் ரயில் நிலையத்தில ஒரு ஆள் நின்னுகிட்டு இருந்தார் .(ஒரு ஆள்தானா அப்படின்னு கேக்காதீங்க ) . அவர எங்கயோ பாத்தமாதிரி இருந்தது . அவர் கிட்ட நீங்க திருநெல்வேலியா அப்படின்னு கேட்டேன் . ஆள் முடிவெட்ட பாத்து போலீஸா அப்படின்னு கேட்டேன் . ஆமா என்றார் . கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் . திடீர் என்று சார் பொங்கலுக்கு எதாவது பாத்து செய்யுங்க அப்படி என்றார் . என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல . சார் ஒரு 1௦௦ ரூபாய் கொடுத்தா உங்க பேர சொல்லி தண்ணி அடிச்சுக்குவோம் அப்படி என்றார். அவர் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சு வேற இருந்தார் போல வாடை அடிச்சது . அப்புறம் அந்த ஆள சமாளிச்சு காசு கொடுக்கமா அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு ..


எப்படி தான் தெரியாத ஆள் கிட்ட கூச்சப்படாம காசு கேக்குறாங்க அப்படின்னு தெரியலை. ரெம்ப மோசமான ஒரு நிலைமையை நோக்கி போறதைதான் காட்டுது இது .

இந்த குடிப்பழக்கம் ஒரு மனிதனை எவ்ளோ தூரம் சுய மரியாதையை (இந்த காலத்துல இப்படி ஒன்னு இருக்கா அப்படின்னு கேக்காதீங்க) இழக்க செய்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை .இப்படி தான் குடிக்க வச்சு நிறைய பேர ஏமாற்றுகிறார்கள் போல .

எனக்கும் என் நண்பனுக்கும் டிக்கெட் போட்டு இருந்தேன் . என்னோட நண்பன் வராத காரணத்தால அவனோட நண்பன் ஒருத்தன் வந்தான் . ரயில் பரிசோதகர் வந்தார் . வழக்கம் போல டிக்கெட்டும் , ஐடி கார்ட்யும் கேட்டார் . நான் கொடுதேன் சரின்னு சொல்லி டிக் அடிச்சிட்டு போய்ட்டார் . எனக்கு ஒரு மாதிரி இருந்ததால கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன் .. கைய தலகாணி மாதிரி வச்சு .. எந்திச்சதுக்கு அப்புறம் தான் அதோட விளைவு தெரிஞ்சது . சரியான வலி .

ரயில் விழுப்புரம் போறதுக்கு 3௦ நிமிடத்துக்கு முன்னாலே ஒரு பறக்கும் படை ஆள் வந்தார் . வந்து எங்களோட berth number சொல்லி ஐடி கார்டு காமிங்க அப்படினார். நான் காமிச்சேன் .. என் கூட வந்த பயன் வேற பேர்ல பயணம் செய்றதால அவன் பேர் அப்பா பேர் எல்லாம் கேட்டார்.. அவன் சொன்னான் . அதுக்கு அப்புறம் அந்த பறக்கும் படை ஆள் இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க .உண்மையா சொன்ன அபாரதம் மட்டும் தான் . இல்லேன்னா 3 மாசம் சிறை தண்டனை அப்படின்னு மிரட்டினார் . அவன் வேற வழி இல்லாம உண்மையா சொன்னான் . அப்புறம் 608 ரூபாய் அவருக்கு மொய் எழுதிட்டு அப்படியே பயணத்தை தொடர்ந்தோம் .


அப்ப அந்த பறக்கும் படை நபர் சொன்ன முக்கியமான விடயங்கள்

1 . இந்த மாதிரி ஆள் மாறும்போது 48 மணி நேரத்துக்கு முன்னால ரயில் நிலையத்தில் எழுதி கொடுத்தா மாத்திடலாம்

2 . குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் ரேஷன் கார்டு கொடுத்து 24 மணி நேரத்தில மாத்திடலாம் .

3 . இல்லை மேல சொன்ன ரெண்டும் முடியல அப்படினா ஒரு waiting லிஸ்ட் டிக்கெட் எடுத்துட்டு அதே டிக்கெட்ல பயணம் செய்யலாம் . உறுதி செய்யப்பட்ட டிக்கட்க்கு பரிசோதகரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு ரயில் நிலையத்தில் கொடுத்தால் 5௦% திரும்ப கிடைக்கும் .

இந்த மாதிரி சமயத்துல யார் பயணம் செய்கிறாரோ அவர் டிக்கெட்டில் பெயர் இருக்கும் நபரின் ஐடி கார்டு நகல் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று ஒரு விதி கொண்டு வரலாம் ..

இதுல என்ன கொடுமை என்றால் காகித டிக்கெட்களுக்கு இந்த மாதிரி எந்த வரம்பும் கிடையாது .. மின் டிக்கெட்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை . நிறைய ஊர்ல டிக்கெட் இல்லாம போறாங்க. அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியல . இந்த மாதிரி விடயங்கள தமிழ்நாட்டுல மட்டும் செய்து ரயில்வே வருமானம் பாக்குறாங்க . ரயில்வே இந்த மாதிரி வர அபராதத்தை ஒரு வருமானமாக பாக்க ஆரம்பித்தது இன்னும் கொடுமை.

கேட்டா முகவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுறோம் அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களே முகவர்களுக்கு சிறப்பு login கொடுத்து அவங்களுக்கு டிக்கெட் அதிகமா புக்கிங் பண்றமாதிரி செஞ்சிட்டு இந்த மாதிரி விடயங்களையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எல்லாம் நம்ம நேரம் .

அப்புறம் ஒரு சக பயணி அவன தூங்க சொன்னார். அதுக்கு ஒருத்தர் 608 ரூபாய் கொடுத்துட்டு எப்படிங்க தூங்குவார் அப்படின்னு கிண்டல் பண்ணினார் .. அப்புறம் எல்லோரும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க . நான் ஏற்கனவே தூங்கிட்டதால எனக்கு தூக்கம் வரலை . என்னோட நண்பன கிண்டல் பண்ணிய நண்பர் சொன்னார். இந்த பறக்கும் படை ஆள் எப்போவும் ரெம்ப தெளிவான ஆள். நிறைய பேருக்கு ஆப்பு அடிச்சு இருக்கார் என்றார். அந்த பறக்கும் படை ஆளைய ஒரு நெல்லை பயணி வெறுப்பு ஏற்றி தப்பித்ததை சொன்னார்.

நெல்லை நபருக்கு 35 வயசு இருக்கும் போல . அவர் கிட்டே ஐடி கார்டு கேட்டதும் அப்படி எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். அப்போ வாக்காளர் அடையாள அட்டை இருக்குமே அதை குடுங்க அப்படின்னு பறக்கும் படை ஆள் சொல்லி இருக்கார். அதற்கு நெல்லை நபர் எனக்கு ஓட்டே இல்லை . அப்புறம் வாக்காளர் அட்டைக்கு எங்கே போறதுன்னு சொல்லி இருக்கார் . அப்புறம் என்கிட்டே இருக்கிறது இந்த வங்கி அட்டை (ATM கார்டு) தான் . இதை ஐடி கார்ட நினைத்து கொள்ளுங்கள் என்று சண்டைய போட்டு தப்பிச்சு இருக்கார். இந்த பறக்கும் படை ஆளுக்கும் ஒன்னும் பண்ண முடியல போல .
அப்படியே பேசிகிட்டு இருந்தோம் .. கொஞ்ச நேரத்துல தூங்கிட்டோம் . காலைல எந்திரிச்ச ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்ன பயன் அவங்க மாமா கூட பொங்கலுக்கு அவன் தாத்தா ஊருக்கு போறேன்னு சொல்லி பேசிக்கிட்டு வந்தான் . அந்த பையனுக்கு மரங்கள் பற்றி அவ்ளோவா தெரியல . வேலி மரத்த பாத்து பலா மரம் என்றான் . இப்படி தான் நாம நம்ம தலைமுறைய வளர்த்து கொண்டு இருக்கிறமோ

Monday, January 11, 2010

விடியும் வரை பேச்சு துணையாக


சில்லிடும் பனியும்
நிலவின் ஒளியும்

பின்னிரவை ஏகாந்தமாக்கி
கொண்டு இருந்தன

யாரோ நடந்து வரும் சத்தம்
கம்பை தட்டி கொண்டே

இரவுடன் தனிமையில் உரையாடலா
என்று யோசிக்கும் நேரம்

சத்தம் கூர்மை ஆகிக்கொண்டு
காதை நெருங்கியது

கூர்க்கா வந்து நின்றார்
கூச்சத்துடன்

என்ன என்று கேட்டால்
பேசியே நாட்கள் ஆகிவிட்டது

உங்களுடன் கொஞ்சம் பேச
வேண்டும் என்றார்

பேசி கொண்டே இருந்தார்
கேட்டு கொண்டே இருந்தேன்

விடியும் வரை பேச்சு துணையாக

Sunday, January 10, 2010

நெல்லை பதிவர் சந்திப்பு

நெல்லை பதிவர் சந்திப்பு


நெல்லை பதிவர் சந்திப்பு

வரும் தை பொங்கல் விடுமுறையில் நெல்லையில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று நான் விரும்புகிறேன் .
இடம் , தேதி மற்றும் நேரங்களை பதிவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம் .உங்களுக்கு தெரிந்த பதிவர்களையும் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கவும்
அதனால் வர விரும்பும் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் பின்னுட்டத்தில் விருப்ப தேதி மற்றும் நேரங்களை தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கவும் .
அதற்கு ஏற்ப நாம் முடிவு செய்து கொள்ளலாம் .

இடம் : VOC மைதானம் பாளையங்கோட்டை (பாளை பேருந்து நிலையம் அருகில் )
தேதி : 16 சனவரி (சனி கிழமை )
நேரம் : மாலை 5 மணி

மேலதிக தகவலுக்கு http://nellainanban.blogspot.com/2010/01/blog-post_11.html

பின்குறிப்பு : நெல்லை பதிவர்கள் மட்டும் அல்லாது அனைத்து பதிவர்களையும் எதிர்பார்க்கிறோம்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
9894700676

நிரம்பி வழிகிறேன்


நிரம்பி வழிந்தேன்
உன் நினைவுகளில்
எனை பிரிந்தாய்
சூனியமானது வாழ்க்கை
உன் நினைவுகளில் கரைந்தும்
கரையாத வாழ்வில் நான்
நெஞ்சில் புதைந்து அழுதாய்
நேற்று என் கனவில்
நீ எங்கு இருக்கியோ எப்படி இருக்கியோ
என்று தெரியாமலே
நிரம்பி வழிகிறேன்
உன் நினைவுகளில்

Thursday, January 7, 2010

காத்திருப்பதும் சுகமே


கால் கடுக்க நண்பனுக்காக
திரை அரங்கிலும்
ஒவ்வொரு பேருந்தையும்
தனக்கானது என்ற தவிப்புடன்
மழை பெயும் நேரத்தில்
தனிமையில் அவளுக்காகவும்
வயிறு கொதிக்கும் நேரத்தில்
வர வேண்டிய ஒரு காபி வடைக்கும்
தேர்வு முடிவுக்காக வயிற்றில்
உருளும் பீதியுடன்
காத்திருக்கும் கண நேரம்
கன நேரமானாலும்
காத்திருப்பதும் சுகமே .

Saturday, January 2, 2010

காத்திருக்கும் வெறுமை


ஒற்றைச் சன்னல்
ஓரமாய் கசியும் வெளிச்சம்
என்றும் பிரியா
மேசை நாற்காலி
காற்றில் பறக்க
துடிக்கும் காகிதம்
பொறுமையில்லா மை கசியும்
பழைய பேனா
இருட்டறை முழுதும் நிரம்பிய
மிரட்டும் வெறுமை
எப்போதும் காத்திருக்கின்றன
ஏன் என்று புரியாமலே

Friday, January 1, 2010

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு காட்சி . மணிவண்ணன் இறந்த பின் சுடுகாட்டில் தருண் கோபிக்கு மொட்டை அடிக்காமல் கை முடியை மட்டும் சிரைத்து விட்டு விடுவார்கள் . அதற்கு நடிகர் இளவரசு என்று நினைக்கிறேன் சொல்லும் காரணம் "தருண்கோபியின் மதினி மாசமாக இருப்பதால் புள்ளைக்கும் தாய்க்கும் எதுவும் ஆகி விட கூடாது " என்று சொல்லுவார் .

யாருக்காவது ஏன் இப்படி ஒரு செய்முறை என்று தெரிந்தால் சொல்லவும் ..

இது தவிர , தென் தமிழகத்தின் சில சாதிகளில் சுடுகாட்டுக்கு பிணங்களை தூக்கி செல்லும்போது "நாற்காலியில் உக்கார வைத்து தான் கொண்டு செல்வார்கள்" ஆனால் பெரும்பாலான தமிழ் படங்களில் படுக்க வைத்துதான் தூக்கி செல்கிறார்கள் .

யாருக்கவாது இது பற்றி தெரிந்தால் சொல்லவும்