Wednesday, September 1, 2010

நிசப்தம்

நிலவுக்கு என்ன வெட்கமோ
அடிக்கடி மேகத்தில் ஒளிகிறது
மேகத்திற்கு என்ன படபடப்போ
காற்றோடு காற்றாக ஓடுகிறது


காற்றுக்கு என்ன பரபரப்போ
மரத்தை வேகமாக தழுவி நகர்கிறது
மரத்திற்கு என்ன பயமோ
பீதியில் உறைந்து நிற்கிறது
பசிக்கு என்ன உக்கிரமோ
என் வயிறு கபகபன்னு எரிகிறது
யாருக்கு என்ன குறையோ
எங்கிருந்தோ முனகல் சத்தம்
என்ன என்று நிதானித்தால்
எதுவும் புலப்படவில்லை
மனதின் சோகங்களும்
மாலையின் மழை துளிகளும்
கண்ணீராக சொரிந்தன
மரத்தின் அசையா இலைகளில் இருந்து

என்ன ஆச்சு என் இப்படி
என்றேன் மரத்திடம்
மரம் சொன்னது
நாளை என்னை வெட்ட போறாங்க
ஏதோ புதுசா பாலம் கட்டப் போறங்களாம்
நிசப்தத்துடன் வார்த்தை இன்றி நான்

Tuesday, August 17, 2010

ஏதோ ஒன்று

எந்த எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒரு நிலையில் நான்

ஏதோ ஒன்று தூண்டியது எதையோ எழுத

எதற்கு என்று தெரியாமலே

ஏதோ ஒன்றை யோசித்தபொழுது

என் மனம் கேட்டது

ஏதோ ஒன்று சொன்னதற்காக இப்படியா என்று

ஆம் என்று சொல்லி விட்டு மூழ்கினேன்

எதை எழுதுவது என்று என ஏதோ ஒரு யோசனையில்

ஏதோ ஏதோ எழுதினேன்

அந்த ஏதோ ஒன்று சொன்னதற்காக

எழுதி முடித்து பார்க்கையில்

ஏதோ ஒன்று எழுதப்பட்டு இருந்தது

அந்த ஏதோ ஒன்றிடம் கேட்டேன்

எப்படி இருக்கிறது என்று

அது சொன்னது ஆம்

ஏதோ ஒன்றை ஏதோ எழுதி இருக்கிறாய் என்று

ஏதோ ஒன்றை எழுதி முடித்த மனம்

எதற்கோ தயார் ஆகிக்கொண்டு இருந்தது

அது எதற்கு தயாரானது தெரியுமா

அந்த ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க

Monday, June 21, 2010

காற்றில் கரையும் நாட்பொழுது

சன்னல் ஓரத்தில் கசியும் சூரிய ஒளி
சன்னலோர மரத்தில் காதல் மொழி பேசும் குருவிகள்
இரவில் பெய்த மழையில் இலையுடன் மலர்ந்த
காதலை வலியுடன் வழுக்கி செல்லும் மழை துளிகள்


வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து
காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை
இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து
பசி தூண்டும் இட்லி கொப்பரை விசில்
கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
என்று தெரியாமலே கொத்தும் மைனா
அனுமதி இன்றி சன்னலோர இலை ஊடுருவி
என் உடலிலும் படுக்கையிலும் படம் வரையும் சூரிய ஒளி

பின்பகல் நித்திரை களைந்து எட்டி பார்த்தால்
வானத்திற்கு வண்ணம் பூசி அழகாக்கும் சூரியன்
பகல் நேர இரை தேடல் முடிந்து கூட்டமாக
வீடு தேடி செல்லும் பறவை கூட்டங்கள்
ஒற்றை தட்டலில் ஒளிர்ந்து ஊரையே
அழகாக்கும் தெரு விளக்குகள்
தெரு விளக்கில் கோபம் கொண்டு மேற்கு தொடர்ச்சியில்
வேகமாக ஒளியத் துடிக்கும் சூரியன்
காதலனை பார்க்க வரும் முழு நிலவு
பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள்
மேகத்தையும் நிலவையும் கண்ணடித்து
ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள்

இரவையே இசை மயமாக்கும் எங்கிருந்தோ
வரும் பூச்சிகள் எழுப்பும் ஒலி
இப்படி நிரம்பி வழியும் தருணங்களுடன்
காற்றில் கரையும் நாட்பொழுது

Monday, May 3, 2010

காற்றில் கரையும் ஓவியங்கள்


எப்பொழுதாவது போன் பேசும்போதும்
gtalk ஓர்குட்டில் உன் பெயர் பார்க்கும்போதும்

காற்றில் அலையும் சிறகு
ஓவியம் வரைவது போல்

உன்னை காணாத கண்கள்
உன் முகம் வரைகின்றன

எத்தனை முறை வரைந்தும்
காற்றிலேயே கரைக்கின்றேன் உன் முகத்தை

முகம் மறந்தவன் நானா
முகம் மறைத்தவன் தான் நீயா

என் கண்கள் வரைந்து கொண்டே
தேடும் உன் முகத்தை

உன்னை காணும் வரை
உன்னை காணும் வரை
சந்திக்காமலே என் எண்ணங்களை ஆக்கிரமிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் .....

Tuesday, March 23, 2010

வீர வணக்கம்

வீர வணக்கம்மானத்துடன் வாழ்ந்து நாட்டிற்காக போராடி கொண்ட கொள்கைக்காக இதே நாளில் 1931 ஆம் ஆண்டு உயிர் நீத்த மாவீரர்கள் பகத் சிங் , ராஜ குரு , சுகதேவ் ஆகியோருக்கு வீர வணக்கம்

Friday, March 5, 2010

அவள் பெயர் தமிழரசி - ஒரு பார்வை

இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய் , நந்தகி , கஞ்சா கருப்பு நடிப்பில் வெளி வந்து இருக்கும் "அவள் பெயர் தமிழரசி " திரைப்படம் பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் கூத்தில் ஆரம்பித்து அந்த கூத்தில் வரும் தமிழரசியான "நந்தகியை" அந்த ஊரின் பணக்கார சிறுவன் "ஜோதி முருகன் " என்னும் ஜெய்க்கு பிடித்து விட அவன் தன் தாத்தாவிடம் சொல்லி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அதே ஊரில் தங்க வைக்கிறான் . இருவரும் பள்ளி படிப்பு முடியும் வரை இணை பிரியா சேக்களிகளாக அந்த ஊரை வலம் வருகிறார்கள் . பள்ளி இறுதி படிப்பில் அதிக மதிப்பெண் பெரும் நந்தகி மேல் படிப்பிற்காக வெளியூர் செல்ல இருக்கும் வேளையில் நந்தகியை பிரிய மனம் இல்லாத பள்ளி இறுதி தேர்வில் தவறிய ஜெய் செய்யும் ஒரு தவறால் நந்தகியை பிரிய நேர்கிறது . நந்தகியை தேடி அலையும் ஜெய் இறுதியில் நந்தகியை கண்டுபிடிக்க முயல்வதுதான் கதை .

படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது . கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஆரம்பித்து இளவட்டங்களின் வாழ்க்கை வரை தெளிவாகவும் சுவாரசியம் குறையாமலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது . இந்த முதல் பாதியில் அழிந்து போகும் நிலையிலும் அதனை காப்பாற்ற தன் வயிற்றை காப்பாற்ற மறந்து வறுமையில் உழலும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்து உள்ளது .


படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஜெய் நந்தகியை தேடி அலையும் காட்சிகள் தான் பெரும்பாலும் . ஆனால் இந்த பாதி மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த தவறிவிட்டது . அப்படி ஏற்படுத்தி இருந்தால் இந்த படம் மிக மிகச் சிறந்த படங்களின் வரிசையில் அமர்ந்து இருக்கும் .

படத்தில் பிடித்தமான விடயங்கள்

கதையில் வரும் நடிகர்களின் தேர்வும் அவர்களின் பேச்சு வழக்கும் .கதை நெல்லை மாவட்ட சூழலில் நடை பெறுவதால் நெல்லை பேச்சு வழக்கு அழகாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக படங்களில் நெல்லை பேச்சு வழக்கு அவ்வளவு சிறப்பாக பயன்படுத்தப்பட்டது இல்லை .

சிறுவர்கள் வரும் காட்சிகள் இப்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் மிகவும் சுவாரசியம் உள்ளதாக அமைந்து வருகின்றன . அந்த வரிசையில் இந்த படத்தின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும்சுவாரசியம்

மதிய உணவிற்காக தமிழரசி மற்றும் அவள் தம்பி பள்ளி கூடம் செல்லும் காட்சி கர்ம வீரரை மனதில் இருத்தி சென்றது . நந்தகி வகுப்பில் தூங்கும் காட்சி ஒரு குறும்பட கரு .

கூத்து கலைக்கு போட்டியாக வரும் அந்த கிராமத்திற்கு வரும் circus எப்படி கூத்து கலையையும் கலைஞர்களின் வாழ்கையும் விவரிக்கும் காட்சி அருமை . கூத்து மேளத்தை தட்டி கொண்டு தாத்தாவும் பேத்தியும் தானிய வசூலுக்கு செல்லும் காட்சியில் பின்னணியில் circus அறிவிப்பு ஒலிக்கும் காட்சியில் இயக்குனர் தெரிகிறார் .

கூத்தின் இறுதி நாள் மழை பெய்யும் என்பது நம்பிக்கை . அந்த நம்பிக்கை நடக்குமா என்று கூத்து நடத்தும் தாத்தா வானம் பார்த்து கூத்து முடித்து உட்கார்ந்து இருக்கும் காட்சி நெகிழ்ச்சி .

ஜோதிமுருகனின் தாத்தா , தமிழரசியின் தாத்தா , தமிழரசியின் தம்பி கதாபாத்திரங்களை ஏற்றவர்களின் நடிப்பு மிகவும் அருமை .

ஜோதி முருகனிடமே யார் தவறு செய்தது என்று தமிழரசியின் அம்மா கேட்கும் காட்சியில் வசனமே இல்லாத காட்சி அமைப்பு ஒளிப்பதிவின் முக்கியத்தை உணர்த்துகிறது .

ஜோதி முருகனின் தவறுக்கு அவனை தமிழரசியின் தம்பி அடிக்கும் காட்சி பாசத்தின் உச்சகட்ட உக்கிரம் .

கஞ்சா கருப்பின் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுணக்கம் இல்லாமல் கொண்டு செல்ல மிகவும் உதவி உள்ளது ,

முதல் பாதியில் வரும் பின்னணி இசை கிராமிய சுழலுக்கு மிகவும் பொருத்தம் .. பின்னணி இசையுடன் ஒளிப்பதிவும் சேர்ந்து காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது .

ஆக மொத்தம் படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும் ,இரண்டாம் பாதி எந்த ஒரு பாதிப்பும் இன்றி உள்ளது. ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம் முதல் பாதிக்காக .

இந்த மாதிரி ஒரு கதையை கொண்டு தன் முதல் படத்திலயே அழிந்து வரும் தோல் பாவை கூத்தை பதிவு செய்த இயக்குனர் மீரா கதிரவன் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர் . இவர் கண்டிப்பாக தமிழ் திரை உலகிற்கு வன்முறை , ஆபாசங்கள் இல்லாத நல்ல படங்களை வரும்காலத்தில் கொடுப்பார் என்பது நிச்சயம் .


படம் பார்த்து விட்டு வரும்போது ஏனோ அழிந்து வரும் மற்றுமொரு கிராமிய கலையான "வில்லு பாட்டு" ஞாபகம் வந்தது இயக்குனரின் வெற்றியே .

தன் சுயத்தை இழக்க மறுத்து கலைக்காக வாழ்வது வறுமையை தான் கொண்டு வருகிறது . தன் சுயத்தை இழத்தல்தான் கலைஞர்களை வலியது வாழும் தத்துவத்தின் கீழ் உலகம் ஏற்றும் கொள்ளும் என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான் .

Monday, February 22, 2010

கிரிக்கெட் தொடர்பதிவு

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் பலா சங்கர் அவர்களுக்கு நன்றி .

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
----------------------------------------------------------------------------


1. பிடித்த கிரிக்கெட் வீரர் : டிராவிட் , லாரா , கங்குலி ,லான்ஸ் குளுஷ்ணர் , சேவாக், யுவராஜ் , முரளி

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் : யாரும் என் மண்டைக்கு தோணலை

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ நாத் ,ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம் , வாக்கர் யூனிஸ் , அம்புரோஸ் , டி வில்லியர்ஸ் (இவர் இந்தியாவுடன் titan cup தொடரில் 1996 ஆம் ஆண்டு ஆடியவர்)

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ சாந்த் , வெங்கடேஷ் பிரசாத் ,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன் , சக்லைன் முஸ்தாக்

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வேங்கடபதி ராஜு , பேட் சிம்கோக்ஸ்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சேவாக் , டிராவிட் ,ரசாக் ,சச்சின்

8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : சஞ்சய் மஞ்ச்ரேகர்

9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா, கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன் ,லான்ஸ் குளுஷ்ணர் ,சங்ககரா

10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் : வினோத் காம்ப்ளி

11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ் , லாரா ,அசாருதீன்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி , நெஹ்ரா

13. பிடித்த ஆல்ரவுண்டர் : லான்ஸ் குளுஷ்ணர் , அப்துல் ரசாக்

14. பிடித்த நடுவர் : குண்டா ஒரு வெள்ளை தாத்தா இருந்தாரே அவரு அப்புறம் நம்ம வெங்கட் ராகவன்

15. பிடிக்காத நடுவர் : சில்வா அப்படின்னு முடியுற பெயர் கொண்ட இலங்கை நடுவர்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : கவாஸ்கர்

17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

18. பிடித்த அணி : அப்படி எதுவும் கிடையாது

19. பிடிக்காத அணி : அப்படி எதுவும் கிடையாது . இந்தியாவை வேண்டும் என்றால் சொல்லலாம் (வணிகமயமாக்கம் காரணமாக )

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- தற்சமயம் கிரிக்கெட் விரும்பி பார்ப்பது இல்லை

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- புதிதாக வந்த அணிகளிடம் திறமையை காமிக்கும் பெரிய அணிகள் விளையாடும் போட்டிகள்

22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, அசாருதீன் , ஸ்மித் , பிளெமிங் , ஹன்சி குரோன்ச்

23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்

24. பிடித்த போட்டி வகை : 20 - 20

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர் , அன்வர் - ஆமிர் சொஹைல்

26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : எதுவும் தோன்றவில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : லாரா , முரளி ,வார்னே ,அக்ரம்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : லாரா , முரளி , வார்னே ,ஸ்டீவ் வாக்

29. பிடித்த விக்கெட் கீப்பர் : சங்ககரா , கில்கிறிஸ்ட் , மொயின் கான் ,நயன் மோங்கியா (கும்ப்ளேக்காக )

தொடர அழைப்பது

ஜான் (இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் . சில உலக சாதனைகள் புரிந்தவர் . அது என்ன என்று அவரிடமே நீங்க கேட்டு தெரிந்து கொள்ளலாம் )

தெக்கிக்காட்டான்

சித்ரா

சமரன்

மயில் இராவணன்

மற்றும் தொடர விரும்புபவர்கள் யாவரும்

Sunday, February 21, 2010

நானும் கொசுவும்

வானம் பார்த்த மாடி பனி சில்லிடும் இரவு
பால் நிற ஒளி சிந்தும் பிறை நிலா

வானில் மிதக்கும் கண்ணடிக்கும் வெள்ளி
மாடியின் குளுமையில் மிதக்கும் நான்

காற்றில் மிதந்தபடி எங்கு இருந்தோ வரும்
வித்தியாசமாக குரைக்கும் நாய்களின் சத்தம்நேராக கோடு போட்டது போல்
யாரோ செல்லும் வாகன சத்தம்

விதவிதமாக ரீங்காரிக்கும் இரவு பூச்சிகள்
எப்போதாவது எதற்கோ பேசும் கௌலி

இதயம் வாசிக்கும் மெல்லிய மேள இசை
இதை எல்லாம் தன்னுள் அடக்கும் காது

இவையன்றி

எந்த எண்ணங்களும் அற்ற மனநிலை
நான் என்னை உணர்ந்து கொண்டு இருந்தேன்

கலைந்தது என் தவம் காலில் கடித்த கொசுவால்

Thursday, February 18, 2010

பதின்மம்

பதின்ம வயதுக்கு முன்னால் வாழ்க்கையில் எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது . வெறும் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்த காலம் . பதின்ம வயதின் முதல் கட்டத்தில் தான் நான் இன்று ஒரு நம்பிக்கை உள்ள மனிதனாக வாழ்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டது . அதற்கு காரணம் என் குடும்பத்தார் தவிர ஆசிரியர்களும் , நண்பர்களுமே முழுக்க கரணம் . இந்த காலம் தான் இரவில் வானத்தை பார்த்து வெள்ளிகளை பகலில் வேப்ப மர நிழல் தேடி மண்ணில் விளையாடும் சிறுவனாக இருந்த என்னை ஒரு காரியத்தை செய்து முடிக்க வல்ல நம்பிக்கையையும் , இந்த சமூகத்துடன் பழகும் வித்தையையும் , அதே சமுகம் தரும் ஏமாற்றத்தையும் எப்படி எடுத்து கொள்வது என்று கற்று கொடுத்தது .

9 ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் என் ஆசிரியர் விதைத்த நம்பிக்கை என்னும் விதைதான் இன்று வரை என்னை ஓட செய்து கொண்டு இருக்கிறது .இந்த கால கட்டங்களில் நட்பு என்பது மரத்தில் காய்த்து கனிந்து வெகு சீக்கிரமாக பறிக்கப்படும் அல்லது உதிரும் பழம் போன்று இருந்தாலும் இன்று வரை நான் மறக்க முடியாதது . என் நட்பின் தோழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட எனக்கு தெரியாது .

இந்த முதல் பாதி நட்பு என்பது பிஞ்சு மனங்களின் உக்கிரமான அன்பை பகிர்ந்து கொள்ளும் காலம் இது . இன்று நினைத்தாலும் பிஞ்சு முகங்களின் பாசமும் அவற்றின் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் அர்த்தமற்ற கோபங்களும் பசுமை . இன்றும் நினைவு இருக்கிறது என் வார்த்தைகளில் நான் உணராத வசீகரத்தை உணர்ந்த நண்பனிடம் நான் பேச மறுத்தபோது தன் கண்ணில் இருந்து 5 நிமிடங்களில் ஒரு அருவியே ஏற்படுத்திய அந்த பால் முகம் மாற என் நண்பனை . இது மட்டுமா ஆசிரியரிடம் பிரம்படி வாங்குவதில் ஆரம்பித்து 50 பைசாக்கு வாங்கும் மிட்டாய் வரை பகிர்ந்து கொள்ள துடிக்கும் அந்த நட்பினை .

முதல் பதின்ம பாதியில் பெற்றவர்களின் அன்பு பிடியில் இருந்து கொஞ்சம் விலகி சமுகத்தின் அரவணைப்பிலும் நிராகரிப்பிலும் வாழ ஆரம்பித்தவன் இரண்டாம் பதின்ம பாதியில் சிறு வயது முதல் வாழ்ந்த மண்ணை உறவுகளை விட்டு விலகி வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் குறைந்தப்பட்ச தகுதியாவது பெற கல்லூரி சென்ற பொழுது எல்லாமே அன்னியம் . ஆனால் அது கற்றுக் கொடுத்தது அன்னியத்தையும் என்னியம் ஆக்குவது எப்படி என்று .

கல்லூரி காலத்தில்தான் பகிர்ந்து உண்ணும் காகையாக வாழும் வாழ்கை எவ்வளவு உன்னதம் என்று புரிந்தது . அக்கறையுடன் அன்னமிடும் விடுதி பணியாளும் , 50 ரூபாயில் பாசத்துடன் பகிர்ந்து உண்டு சிறுகக் சாபிட்டாலும் மகிழ்ச்சி நிறைந்த மனசுடன் வாழ்வை பகிர்ந்த 10 நண்பர்களும் , இளையராஜா முதல் ஈழம் வரை பேசிப் பேசியே இரவை விடிய வைத்த நண்பனும் , என்னுடன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்பதற்காக என் அன்புக்கு லஞ்சம் கொடுத்தவனும் ,எனக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே எனக்கு பிடித்ததை வாங்கி கொடுத்த நண்பனும் , துவளும் நேரத்திலும் தூணாக நின்று தோள் கொடுத்த நண்பர்களும் , அடிப்பட்ட காலை வைத்து நடக்க தவித்தபோது என்னை தூக்கி கொண்டு விடுதி உணவகத்துக்கு தூக்கி சுமந்த நண்பனையும் ,நடுநிசியில் வீட்டில் இருந்து பிரியாணி கொண்டு வந்து தூங்குபவனை எழுப்பி சாப்பிட சொன்ன நண்பனையும் என்று எழுதி கொண்டே போகலாம் அன்பைப் போதித்த நண்பர்களை பற்றி . இன்று வரை என்னை ஒரு அன்புள்ளவனாக இயங்க வைப்பது இவர்கள் தான் .நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே ..


இந்த தொடர் பதிவில் என்னை கலந்து கொள்ள சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அண்ணன் தெக்கிக்காட்டான் அவர்களுக்கு மிகவும் நன்றி .

இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள நான் அழைப்பது

ஜான்
பலா சங்கர்
ஜெட்லி
சே குமார்
அக ஆழ்
பின்னோக்கி
புலவன் புலிகேசி
மந்திரன்

Wednesday, February 17, 2010

காற்றில் அலையும் மகரந்தம்

தேடித் தேடி சலித்து விட்டது
ஆனாலும் தேடி கொண்டே இருக்கிறேன்

ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு தேடல்
ஓவ்வொரு தேடலிலும் ஒன்றை காண்கின்றேன்

அந்த ஒன்றில் உன்னை காண முடியவில்லை
அந்த ஒன்று எங்கு இருக்கிறது என்று தெரியா

முடிவற்ற பயணத்தில் முடியா புதிர்களையும்
அவிழ்க்கும் மன திடத்துடன்


காற்றில் அலையும் மகரந்தம் போல்
உன்னைத் தேடி அலைகின்றேன்

உன்னை அடைந்து என் எண்ணக் கரு
முழுதாக எத்தனை நாள் ஆகுமோ

ஆனால் எதுவும் தெரியா என் எண்ணக் கரு
அண்டம் முழுதும் பரவி நிற்கிறது

ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக
அகத்துள் நீ உறைந்தும்

வழி தெரியா படகாக பயணிக்கிறேன்
உன்னை தேடி என்னை மறந்த நான்

Tuesday, February 16, 2010

போரும் அமைதியும்அமைதியான அற்புத காலை
கையில் போரும் அமைதியும்

வானில் பூத்த பூக்களை
வெண் பஞ்சு மேகங்கள்

ஆட்டத்தை தொடங்கின
தொடர் சிரிப்புடன் மேகங்கள்

என்ன விடயமடா இன்று
என்றேன் மேகங்களிடம்

மறுபடியும் தொடங்கியது
வான்மேகங்களின் ஆட்டம்

குலுங்கி குலுங்கி சிரித்து
மேக கண்கள் சொரிந்தன நீரை

கடும் போர் ஆரம்பித்தது
மண்ணில் விழும் மழைத் துளிகளுக்குள்

எதற்கு தெரியுமா
அழகான கோலம் வரையஆட்டத்தை முடித்தன அமைதியாக
மகிழ்ச்சியாக கரு மேகங்கள்

எனை பார்த்து கேட்டது ஒரு மேகம்
அழகாக இருக்கிறேனா என்று

நான் சொன்னேன் வெண்மையை விட
கருப்பில் தான் அழகு என்று

எப்படி என்று கேட்டது
வெக்கத்துடன் அந்த மேகம்

நான் சொன்னேன் நீ கறுப்பானால்
பூமியும் குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று

தடுமாறிய குரலில் சொன்னது
முகம் கருத்த மேகம்

எல்லாம் உங்கள் கையில் தான்
தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள்

மழை துளிகளின் போர் முடிந்து
என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது

Thursday, February 11, 2010

தீக்குச்சி மெழுகுவர்த்தி அரிக்கேன் விளக்கு

தீக்குச்சிதொட்டால் பற்றிக் கொள்ளும்
கடுங் கோபக்காரன்
அந்த கோபத்திலும் ஒளி
ஏற்றும் பாசக்காரன்


மெழுகுவர்த்திஅரும்பு மீசை வச்ச
வெள்ளைக்காரன்
உருகி உருகி வெளிச்சம்
காட்டும் தங்க மனசுக்காரன்

அரிக்கேன் விளக்குகம்பியில் தொங்கும்
கண்ணாடி உடம்புக்காரன்
தன் உடம்பில் கரி பூசி
வீட்டை அழகாக்கும் ஒப்பனைக்காரன்

மெழுகுவர்த்தி படம் :தெக்கிகாட்டான்

Monday, February 8, 2010

BEAUTIFUL COUNTRY திரைப்படமும் வியட்நாம் போரும்

சென்ற வாரம் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடப்பட்ட "beautiful country" படத்தின் பின்புலத்தை பற்றியது இந்த பதிவு . படத்தை பற்றி நண்பர் பலா சங்கர் ஒரு பதிவு சுந்தர கண்டம் என்ற பெயரில் போட்டு உள்ளார்.

வியட்நாமில் 1953 இல் ஆரம்பிக்கப்பட்ட போர் 1975 இல் முடிவடைந்தது . இந்த போர் இடதுசாரி ஆதரவு பெற்ற படைக்கும் இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்றது . இந்த போரில் அமெரிக்காவின் பங்கு அதிகம் . அமெரிக்க போர்
வீரர்கள் மற்றும் படைகலங்கள் பொதுவாக GI என்று அழைக்கப்படுவார்கள் .இந்த வார்த்தை beautiful country படத்தின் நாயகன் அவனுடைய நண்பர்களுடன் விளையாடும்போது வரும் வசனத்தில் கூட வரும் .

வியட்நாம் சென்ற அமெரிக்க படை வீரர்கள் அவர்களது உடல் தாகத்தை தணிக்க வியட்நாம் பெண்களை கற்பழிக்க ஆரம்பித்தார்கள் . வியட்நாமில் விபச்சாரமும் பெருகியது . சிலர் திருமணம் கூட செய்து கொண்டார்கள் .இதனால் வியட்நாமில் நிறைய amerasian குழைந்தைகள் பிறந்தனர் .

1975 இல் போர் முடிந்ததும் அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவிற்கு திரும்பினர் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வியட்நாமில் விட்டு விட்டு . சில வீரர்கள் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர் . 1980 க்கு அப்புறம் amerasian பிரிவினரால் அரசியல் மற்றும் சமுக தளங்களில் ஏற்பட்ட அதிர்வு அமெரிக்க அரசை யோசிக்க வைத்தது . ஏற்கனவே அமெரிக்க வீரர்கள் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர் . இப்பொழுது அவர்களது குழந்தைகளும் மனைவிகளும் . இதனை ஒட்டி அமெரிக்க அரசாங்கம் amerasian நாடு திரும்பும் சட்டத்தின்படி 1988 ஆம் ஆண்டு வியட்நாமில் உள்ள amerasian மக்களுக்கு விசா வழங்க முடிவு செய்தது . கிட்டத்தட்ட 23000 பேர் முக சாயலை மட்டுமே அடிப்படையாக கொண்டு அமெரிக்க விசா வாங்கி குடிபெயர்ந்தனர் . இவர்களது வாழ்க்கை தரம் அமெரிக்காவிலும் பெரிதா சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த வியட்நாம் போரில் வியட்நாமின் பொருளாதாரமும் மனித வளமும் பெரும் அளவு சிதைந்து போனது . மனித உயிர் பலிகள் கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் மேலான வியட்நாம் பகுதியை சேர்ந்த மக்களும் 50000 க்கும் அதிகமான அமெரிக்க வீரர்களும் . காணமல் போனவர்களும் நிறைய .

இந்த போரிலும் வேதியியல் சார்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அதன் பெயர் "NAPLAM" . இந்த வெடிபொருளை வீசினால் சத்தம் இருக்காது ஆனால் பெரிய தீ பிழம்பை ஏற்படுத்தி விடும் .அப்படி வீசப்பட்ட குண்டு ஒன்று தான் வியட்நாம் போரின் கொடுரத்தை உலகிற்கு காட்டியது அந்த குண்டு விழுந்த ஒரு சிறுமி தன் உடம்பில் ஒரு துணி கூட இன்றி ஓடும் காட்சி புகைப்படமாக 1972 இல் வெளிவந்த பொழுது உலகமே திகைத்துவிட்டது . அந்த சிறுமியின் இப்போதைய புகைப்படம் தான் கீழே உள்ளது .அந்த சிறுமியின் பெயர் கிம் .இவர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் .

போரினால் வியட்நாமில் ஏற்பட்ட இந்த சமுக சீரழிவு 2004 ஆம் ஆண்டு நார்வே நாட்டு இயக்குனர் " Hans Petter Moland " எடுத்த "BEAUTIFUL COUNTRY " மூலம் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது .

இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது

Friday, January 29, 2010

நெடுங்குருதியும் குற்றப்பரம்பரை சட்டமும்

நெடுங்குருதி எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய நாவல் . எஸ்.ரா விருதுநகர் மாவட்டம் மல்லன்கிணறு கிராமத்தில் பிறந்து தற்போது சென்னையில் வசிந்து வருகிறார் . முதலில் எஸ் . ரா எழுத்துக்கள் எப்படி எனக்கு அறிமுகம் ஆகியது என்றால் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய "துணை எழுத்து " தொடராக வந்து கொண்டு இருந்தது . அதை படிக்க ஆரம்பித்த பின்பு அவரது எழுத்துக்கள் மிகவும் பிடித்து விட்டன. எந்த அளவுக்கு என்றால் ஆனந்த விகடன் வாங்கியதும் முதலில் துணை எழுத்து படிக்கும் அளவுக்கு . அதன் பின்பு அவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்களை படித்தாலும் அது துணை எழுத்து அளவுக்கு ஒட்டவில்லை .அதன் பின்பு அவருடைய நெடுங்குருதி நாவல் பற்றி நிறைய பேர் சொன்னதும் , இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி படித்து முடித்தேன் .

நெடுங்குருதி வேம்பலை என்னும் கற்பனை கிராமத்தில் வாழும் வேம்பர்கள் பற்றிய கற்பனை கதை . வேம்பர்கள் வெள்ளையர்களின் காலத்தில் குற்ற பரம்பரை சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டவர்கள் .


குற்ற பரம்பரை சட்டம் என்பது என்ன என்றால் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களால் சந்தேகிக்கப்படும் மக்களின் பெரு விரல் கை ரேகையை பதிந்து சென்று விடுவார்கள் .இப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் இரவு நேரங்களில் கச்சேரி என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மாடுகள் அடைத்து வைக்கப்படும் இடம் போன்ற ஒரு இடத்திற்கு மாலை 6 மணி ஆனதும் இந்த மக்கள் சென்று விட வேண்டும் .கச்சேரியில் இருப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது .கச்சேரியில் தூங்க இடம் இருக்காது . இரவு முழுவதும் உட்கார்ந்தபடியே தான் இருக்க வேண்டும் . விடியும் வரை அங்கே இருந்து தான் அந்த இரவில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் தான் வாழ்நாள் முழுவதும் . இந்த சட்டத்தால் 15 வயது முதல் உள்ள ஆண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் கச்சேரியில் அடைந்து மானம் இழந்து வாழ விரும்பாமல் தான் பெரு விரலை வெட்டி கொண்டவர்கள் நிறைய பேருண்டு .அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அந்த சட்டத்தை தூக்க செய்தனர் .முதலில் நெடுங்குருதி படிக்க ஆரம்பித்தும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சென்றது . சில பக்கங்கள் வாசிச்சதும் கதை தான் ஓட்டத்தின் வழியே இழுத்து சென்றது .நானும் ஆற்று தண்ணிரில் அடிது செல்லப்படும் இல்லை போன்று அதன் கூடவே சென்றேன் . இது வேம்பலையில் வாழும் நாகு குடும்பம் மற்றும் நாகுவை சுற்றியே வருகிறது . வேம்பலை போன்ற ஒரு வெயிலின் வெக்கை ஆட்சி செய்யும் கிராமத்தின் கதையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .

வேம்பர்கள் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தால் அடக்கப்படுகிறார்கள் அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற விடயங்கள் நம்மை 70 வருடங்களுக்கு பின்னாலே இழுத்து செல்கிறது .

கிராமங்களுக்கே உரிய முயல் வேட்டை பற்றிய பகுதிகள் சிறு வயதில் நான் முயல் வேட்டைக்கு சென்றதை நினைவுப்படுத்தியது .

இப்படி விறுவிறுப்பாக செல்லும் நாவல் அடுத்த தலைமுறையினர் குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது . நாவலின் இறுதி பகுதிகள் நாவலை எப்படியாவது முடிக்க வேண்டும் என சவ்வு மாதிரி இழுக்கப்பட்டு திடீர் என்று முடிக்கப்பட்டது போல் உள்ளது .

இந்த நாவலின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேம்பலை தன் மக்களின் குருதியை ருசி பார்த்துகொண்டே இருக்கிறது .பொதுவாக சிறு நிலங்களின் வரலாறுகள் பதிவு செய்யப்படுவது இல்லை . அப்படி பதிவு செய்தது பல விடயங்களை வெளிக்கொண்டு வந்து உள்ளது இந்த நாவல் . எப்படி இருப்பினும் நெடுங்குருதி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு பற்றி தமிழ் எழுத்து உலகில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று .

Sunday, January 24, 2010

ஹோசானா


உன்னை மறுபடியும் நினைக்க
வைத்த ஹோசானா பாடலை

பண்பலையில் தேடித் தேடி
தேய்ந்த விரல்கள்

கடற்கரை முழுதும் தேய்ந்து போன
என் காலடி தடங்கள்

கடல் காற்றின் உப்பையும் ஈரத்தையும்
மிஞ்சிய என் காதல்

அலையின் சத்தத்தை மீறி கேட்ட
என் இதய துடிப்பு

என்ன என்று கேட்டால் உன்னை
பார்க்க வேண்டும் என்கின்றது
முதன் முதலில் பார்த்தேன்

தினம் தினம் உன்னை
பார்க்க வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் பார்த்தேன் உன்னுடன்
வாழ வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் வாழ்ந்தேன்
தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றியது

சும்மாவா

தினம் தினம் நல்ல சமைச்சும்
வசவு வாங்கிறது உன்கிட்ட

கி ரா பக்கங்கள்

கி . ரா என்று அழைக்கப்படும் கி . ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவலை சேர்ந்தவர் . தற்சமயம் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கரிசல் இலக்கியத்தின் இவரது பங்களிப்பு ரெம்ப முக்கியமானது . இவரது எழுத்துக்களை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது கீற்று தளம் ஆகும் . அதில் இவரது எழுத்துக்கள் எனக்கு பிடித்து போனது . அதன் பின்பு நான் வாசித்த இவரது "கோபல்ல கிராமத்து மக்கள் " கிட்டத்தட்ட நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்தது .இதன் காரணமாக அவரது எழுத்துகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின .அதன் பின்பு இந்த வருடம் நடந்த புத்தக கண்காட்சியில் அவரின் கரிசக்காட்டு கடுதாசி வாங்கி படிக்க ஆரம்பித்தேன் . அதில் வந்த சில சுவாரசியமான விடயங்களை இந்த பதிவில் தொகுத்து உள்ளேன் ..


காபி வில்லை :

10 வருடங்களுக்கு முன்பு கூட நமது கிராமங்களில் "நீத்தண்ணி" காலையில் எழுந்து குடிக்கும் பழக்கம் இருந்தது . இது எதற்காக என்று பாத்தால் காலையில் எழுந்து இதை குடிப்பதால் உடல் சுடு குறைகிறது . ஆனால் இன்று நீத்தண்ணி குடிப்பது மறைந்து காலையில் என்திச்சதும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது . இது தானாக வரவில்லை நம்மிடம் புகுத்தப்பட்டது . எப்படி முதலில் காபி நமக்கு அறிமுகம் ஆனது என்று பார்ப்போம் .


முதன் முதலாக காபியை நமக்கு அறிமுகமானபோது அது வில்லையாக அறிமுகப்படுத்தப்பட்டது . ஏன் என்று பாத்தால் அப்ப மக்களுக்கு எவ்ளோ போடா வேண்டும் என்று தெரியாது . அதனால் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு . அந்த காலத்தில் காபி ஒரு வீட்டில் குடிக்கிறார்கள் என்றால் அது சமுகத்தில் மதிப்பிற்கு உரிய விடயமாக கருதப்பட்டது . இப்படித்தான் படிப்படியாக எல்லோரும் தன குடும்ப மதிப்பை சமுதாயத்தில் காப்பாற்ற காபி குடிக்க ஆரம்பித்து இன்று அது காலை கடமைகளில் ஒன்றாக ஆகிப்போனது . அது போக விருந்தாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் காபியை மறுத்தாலோ அல்லது மிச்சம் வைத்தாலோ அது மரியாதையை குறைவான செயலாக கருதப்பட்டது .

இது போன்றுதான் நம்மிடம் இருந்த நல்ல உணவு வகைகளை எல்லாம் பின் தள்ளி நாம் சமுக மதிப்புக்காக அரிசி சார்ந்த உணவுகளை அதிகம் தின்று வருகிறோம் .

மோட்டார் வண்டி (பேருந்து ) :

அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் நடை பயணத்தில் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது . வெள்ளைக்காரன் காலத்தில் மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மோட்டார் வண்டி முதலாளிகள் எல்லாம் மக்களை மோட்டார் பயணத்திற்கு பழக்கப்படுத்த ரெம்ப தவிச்சு போய்ட்டாங்க. அதனால் அந்த காலத்தில் யாரவது வண்டி வேண்டும் என்று கேட்டல் வீடு தேடி வந்து அழைத்து போவார்களாம் . அது போக நடந்து போகும் மக்களிடம் வண்டியை நிப்பாட்டி வர்ரீங்களா என்று கேட்டு தான் மக்கள் இந்த மோட்டார் பயணத்துக்கு பழகினார்களாம் .

இன்று பேருந்துக்காக நாம் எப்படி அல்லல்படுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் .

சாப்பாடும் ஆயுளும் :


இது ஒரு கிராமத்து புனைவு என்றாலும் அதில் ஒரு அர்த்தம் இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான் . எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .

பானக்கரப்பம் :
இது ஒரு உடலுக்கு குளிர்ச்சி தரும் வீட்டிலயே செய்யப்படும் ஒரு பானம் ஆகும் . பானக்கரப்பம் என்பது மருவிய சொல்லாக இருக்கலாம் . பானையில் புளி மற்றும் கருப்பட்டிய தண்ணி ஊத்தி குறஞ்சது 6 மணி நேரங்கள் கழித்து நன்றாக அதை கலக்கி அதன் பின்பு குடித்தால் அவ்ளோ சுவையாக இருக்கும் .

எனக்கு மிகவும் பிடித்த பானம் இது . எனக்கு சென்ற வருடம் அம்மை போட்டு இருந்தப்ப தினம் தினம் பானக்கரப்பம் குடிப்பது உண்டு . எங்க குல சாமி கோவிலில் கொடை முடிந்ததும் எல்லோருக்கும் இது வழங்கப்படுவது உண்டு .

Friday, January 22, 2010

சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்

பண்டைய காலத்தில் வாணிகம் என்பது மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்பட்ட தொழில் . இன்று இருந்த போக்குவரத்து வசதிகள் அன்று கிடையாது . பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த சுமைதாங்கி கல் .

சுமை தாங்கி கல் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேல தரைக்கு இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .


திண்ணை கிராமத்து வீடுகளில் வீட்டின் முன்னால் உள்ள திண்டு போன்ற அமைப்பு ஆகும் .இது கிட்டத்தட்ட ஒரு ஆள் முதல் பல பேர் உறங்க வசதி உள்ள ஒரு திண்டு ஆகும் .


இதுவும் முன் பின் தெரியாத நடை பயணிகளுக்கு ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டது . ரெம்ப தூரம் பயணம் செய்யும் மக்களுக்கு அசதி ஏற்பட்டால் அவர்கள் இந்த திண்ணைகளில் அந்த வீட்டுக்காரரிடம் அனுமதி பெற்று ஓய்வு எடுத்து செல்லுவார்கள் .


இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நாம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது

Wednesday, January 13, 2010

நெல்லை பயண கட்டுரை

நெல்லை பயண கட்டுரைபொங்கலுக்கு போறதுக்கு அனந்தபுரி ரயிலில் டிக்கெட் போட்டு இருந்தேன் .. ஊருக்கு போறதுக்கு முன்னாலே சில சுவாரசியமான விடயங்கள் நடந்தது .அது பத்தி தான் இந்த பதிவு .

எழும்பூர் ரயில் நிலையத்தில ஒரு ஆள் நின்னுகிட்டு இருந்தார் .(ஒரு ஆள்தானா அப்படின்னு கேக்காதீங்க ) . அவர எங்கயோ பாத்தமாதிரி இருந்தது . அவர் கிட்ட நீங்க திருநெல்வேலியா அப்படின்னு கேட்டேன் . ஆள் முடிவெட்ட பாத்து போலீஸா அப்படின்னு கேட்டேன் . ஆமா என்றார் . கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் . திடீர் என்று சார் பொங்கலுக்கு எதாவது பாத்து செய்யுங்க அப்படி என்றார் . என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல . சார் ஒரு 1௦௦ ரூபாய் கொடுத்தா உங்க பேர சொல்லி தண்ணி அடிச்சுக்குவோம் அப்படி என்றார். அவர் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சு வேற இருந்தார் போல வாடை அடிச்சது . அப்புறம் அந்த ஆள சமாளிச்சு காசு கொடுக்கமா அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு ..


எப்படி தான் தெரியாத ஆள் கிட்ட கூச்சப்படாம காசு கேக்குறாங்க அப்படின்னு தெரியலை. ரெம்ப மோசமான ஒரு நிலைமையை நோக்கி போறதைதான் காட்டுது இது .

இந்த குடிப்பழக்கம் ஒரு மனிதனை எவ்ளோ தூரம் சுய மரியாதையை (இந்த காலத்துல இப்படி ஒன்னு இருக்கா அப்படின்னு கேக்காதீங்க) இழக்க செய்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை .இப்படி தான் குடிக்க வச்சு நிறைய பேர ஏமாற்றுகிறார்கள் போல .

எனக்கும் என் நண்பனுக்கும் டிக்கெட் போட்டு இருந்தேன் . என்னோட நண்பன் வராத காரணத்தால அவனோட நண்பன் ஒருத்தன் வந்தான் . ரயில் பரிசோதகர் வந்தார் . வழக்கம் போல டிக்கெட்டும் , ஐடி கார்ட்யும் கேட்டார் . நான் கொடுதேன் சரின்னு சொல்லி டிக் அடிச்சிட்டு போய்ட்டார் . எனக்கு ஒரு மாதிரி இருந்ததால கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன் .. கைய தலகாணி மாதிரி வச்சு .. எந்திச்சதுக்கு அப்புறம் தான் அதோட விளைவு தெரிஞ்சது . சரியான வலி .

ரயில் விழுப்புரம் போறதுக்கு 3௦ நிமிடத்துக்கு முன்னாலே ஒரு பறக்கும் படை ஆள் வந்தார் . வந்து எங்களோட berth number சொல்லி ஐடி கார்டு காமிங்க அப்படினார். நான் காமிச்சேன் .. என் கூட வந்த பயன் வேற பேர்ல பயணம் செய்றதால அவன் பேர் அப்பா பேர் எல்லாம் கேட்டார்.. அவன் சொன்னான் . அதுக்கு அப்புறம் அந்த பறக்கும் படை ஆள் இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க .உண்மையா சொன்ன அபாரதம் மட்டும் தான் . இல்லேன்னா 3 மாசம் சிறை தண்டனை அப்படின்னு மிரட்டினார் . அவன் வேற வழி இல்லாம உண்மையா சொன்னான் . அப்புறம் 608 ரூபாய் அவருக்கு மொய் எழுதிட்டு அப்படியே பயணத்தை தொடர்ந்தோம் .


அப்ப அந்த பறக்கும் படை நபர் சொன்ன முக்கியமான விடயங்கள்

1 . இந்த மாதிரி ஆள் மாறும்போது 48 மணி நேரத்துக்கு முன்னால ரயில் நிலையத்தில் எழுதி கொடுத்தா மாத்திடலாம்

2 . குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் ரேஷன் கார்டு கொடுத்து 24 மணி நேரத்தில மாத்திடலாம் .

3 . இல்லை மேல சொன்ன ரெண்டும் முடியல அப்படினா ஒரு waiting லிஸ்ட் டிக்கெட் எடுத்துட்டு அதே டிக்கெட்ல பயணம் செய்யலாம் . உறுதி செய்யப்பட்ட டிக்கட்க்கு பரிசோதகரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு ரயில் நிலையத்தில் கொடுத்தால் 5௦% திரும்ப கிடைக்கும் .

இந்த மாதிரி சமயத்துல யார் பயணம் செய்கிறாரோ அவர் டிக்கெட்டில் பெயர் இருக்கும் நபரின் ஐடி கார்டு நகல் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று ஒரு விதி கொண்டு வரலாம் ..

இதுல என்ன கொடுமை என்றால் காகித டிக்கெட்களுக்கு இந்த மாதிரி எந்த வரம்பும் கிடையாது .. மின் டிக்கெட்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை . நிறைய ஊர்ல டிக்கெட் இல்லாம போறாங்க. அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியல . இந்த மாதிரி விடயங்கள தமிழ்நாட்டுல மட்டும் செய்து ரயில்வே வருமானம் பாக்குறாங்க . ரயில்வே இந்த மாதிரி வர அபராதத்தை ஒரு வருமானமாக பாக்க ஆரம்பித்தது இன்னும் கொடுமை.

கேட்டா முகவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுறோம் அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களே முகவர்களுக்கு சிறப்பு login கொடுத்து அவங்களுக்கு டிக்கெட் அதிகமா புக்கிங் பண்றமாதிரி செஞ்சிட்டு இந்த மாதிரி விடயங்களையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எல்லாம் நம்ம நேரம் .

அப்புறம் ஒரு சக பயணி அவன தூங்க சொன்னார். அதுக்கு ஒருத்தர் 608 ரூபாய் கொடுத்துட்டு எப்படிங்க தூங்குவார் அப்படின்னு கிண்டல் பண்ணினார் .. அப்புறம் எல்லோரும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க . நான் ஏற்கனவே தூங்கிட்டதால எனக்கு தூக்கம் வரலை . என்னோட நண்பன கிண்டல் பண்ணிய நண்பர் சொன்னார். இந்த பறக்கும் படை ஆள் எப்போவும் ரெம்ப தெளிவான ஆள். நிறைய பேருக்கு ஆப்பு அடிச்சு இருக்கார் என்றார். அந்த பறக்கும் படை ஆளைய ஒரு நெல்லை பயணி வெறுப்பு ஏற்றி தப்பித்ததை சொன்னார்.

நெல்லை நபருக்கு 35 வயசு இருக்கும் போல . அவர் கிட்டே ஐடி கார்டு கேட்டதும் அப்படி எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். அப்போ வாக்காளர் அடையாள அட்டை இருக்குமே அதை குடுங்க அப்படின்னு பறக்கும் படை ஆள் சொல்லி இருக்கார். அதற்கு நெல்லை நபர் எனக்கு ஓட்டே இல்லை . அப்புறம் வாக்காளர் அட்டைக்கு எங்கே போறதுன்னு சொல்லி இருக்கார் . அப்புறம் என்கிட்டே இருக்கிறது இந்த வங்கி அட்டை (ATM கார்டு) தான் . இதை ஐடி கார்ட நினைத்து கொள்ளுங்கள் என்று சண்டைய போட்டு தப்பிச்சு இருக்கார். இந்த பறக்கும் படை ஆளுக்கும் ஒன்னும் பண்ண முடியல போல .
அப்படியே பேசிகிட்டு இருந்தோம் .. கொஞ்ச நேரத்துல தூங்கிட்டோம் . காலைல எந்திரிச்ச ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்ன பயன் அவங்க மாமா கூட பொங்கலுக்கு அவன் தாத்தா ஊருக்கு போறேன்னு சொல்லி பேசிக்கிட்டு வந்தான் . அந்த பையனுக்கு மரங்கள் பற்றி அவ்ளோவா தெரியல . வேலி மரத்த பாத்து பலா மரம் என்றான் . இப்படி தான் நாம நம்ம தலைமுறைய வளர்த்து கொண்டு இருக்கிறமோ

Monday, January 11, 2010

விடியும் வரை பேச்சு துணையாக


சில்லிடும் பனியும்
நிலவின் ஒளியும்

பின்னிரவை ஏகாந்தமாக்கி
கொண்டு இருந்தன

யாரோ நடந்து வரும் சத்தம்
கம்பை தட்டி கொண்டே

இரவுடன் தனிமையில் உரையாடலா
என்று யோசிக்கும் நேரம்

சத்தம் கூர்மை ஆகிக்கொண்டு
காதை நெருங்கியது

கூர்க்கா வந்து நின்றார்
கூச்சத்துடன்

என்ன என்று கேட்டால்
பேசியே நாட்கள் ஆகிவிட்டது

உங்களுடன் கொஞ்சம் பேச
வேண்டும் என்றார்

பேசி கொண்டே இருந்தார்
கேட்டு கொண்டே இருந்தேன்

விடியும் வரை பேச்சு துணையாக

Sunday, January 10, 2010

நெல்லை பதிவர் சந்திப்பு

நெல்லை பதிவர் சந்திப்பு


நெல்லை பதிவர் சந்திப்பு

வரும் தை பொங்கல் விடுமுறையில் நெல்லையில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று நான் விரும்புகிறேன் .
இடம் , தேதி மற்றும் நேரங்களை பதிவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம் .உங்களுக்கு தெரிந்த பதிவர்களையும் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கவும்
அதனால் வர விரும்பும் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் பின்னுட்டத்தில் விருப்ப தேதி மற்றும் நேரங்களை தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கவும் .
அதற்கு ஏற்ப நாம் முடிவு செய்து கொள்ளலாம் .

இடம் : VOC மைதானம் பாளையங்கோட்டை (பாளை பேருந்து நிலையம் அருகில் )
தேதி : 16 சனவரி (சனி கிழமை )
நேரம் : மாலை 5 மணி

மேலதிக தகவலுக்கு http://nellainanban.blogspot.com/2010/01/blog-post_11.html

பின்குறிப்பு : நெல்லை பதிவர்கள் மட்டும் அல்லாது அனைத்து பதிவர்களையும் எதிர்பார்க்கிறோம்

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
9894700676

நிரம்பி வழிகிறேன்


நிரம்பி வழிந்தேன்
உன் நினைவுகளில்
எனை பிரிந்தாய்
சூனியமானது வாழ்க்கை
உன் நினைவுகளில் கரைந்தும்
கரையாத வாழ்வில் நான்
நெஞ்சில் புதைந்து அழுதாய்
நேற்று என் கனவில்
நீ எங்கு இருக்கியோ எப்படி இருக்கியோ
என்று தெரியாமலே
நிரம்பி வழிகிறேன்
உன் நினைவுகளில்

Thursday, January 7, 2010

காத்திருப்பதும் சுகமே


கால் கடுக்க நண்பனுக்காக
திரை அரங்கிலும்
ஒவ்வொரு பேருந்தையும்
தனக்கானது என்ற தவிப்புடன்
மழை பெயும் நேரத்தில்
தனிமையில் அவளுக்காகவும்
வயிறு கொதிக்கும் நேரத்தில்
வர வேண்டிய ஒரு காபி வடைக்கும்
தேர்வு முடிவுக்காக வயிற்றில்
உருளும் பீதியுடன்
காத்திருக்கும் கண நேரம்
கன நேரமானாலும்
காத்திருப்பதும் சுகமே .

Saturday, January 2, 2010

காத்திருக்கும் வெறுமை


ஒற்றைச் சன்னல்
ஓரமாய் கசியும் வெளிச்சம்
என்றும் பிரியா
மேசை நாற்காலி
காற்றில் பறக்க
துடிக்கும் காகிதம்
பொறுமையில்லா மை கசியும்
பழைய பேனா
இருட்டறை முழுதும் நிரம்பிய
மிரட்டும் வெறுமை
எப்போதும் காத்திருக்கின்றன
ஏன் என்று புரியாமலே

Friday, January 1, 2010

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு காட்சி . மணிவண்ணன் இறந்த பின் சுடுகாட்டில் தருண் கோபிக்கு மொட்டை அடிக்காமல் கை முடியை மட்டும் சிரைத்து விட்டு விடுவார்கள் . அதற்கு நடிகர் இளவரசு என்று நினைக்கிறேன் சொல்லும் காரணம் "தருண்கோபியின் மதினி மாசமாக இருப்பதால் புள்ளைக்கும் தாய்க்கும் எதுவும் ஆகி விட கூடாது " என்று சொல்லுவார் .

யாருக்காவது ஏன் இப்படி ஒரு செய்முறை என்று தெரிந்தால் சொல்லவும் ..

இது தவிர , தென் தமிழகத்தின் சில சாதிகளில் சுடுகாட்டுக்கு பிணங்களை தூக்கி செல்லும்போது "நாற்காலியில் உக்கார வைத்து தான் கொண்டு செல்வார்கள்" ஆனால் பெரும்பாலான தமிழ் படங்களில் படுக்க வைத்துதான் தூக்கி செல்கிறார்கள் .

யாருக்கவாது இது பற்றி தெரிந்தால் சொல்லவும்