Monday, June 21, 2010

காற்றில் கரையும் நாட்பொழுது

சன்னல் ஓரத்தில் கசியும் சூரிய ஒளி
சன்னலோர மரத்தில் காதல் மொழி பேசும் குருவிகள்
இரவில் பெய்த மழையில் இலையுடன் மலர்ந்த
காதலை வலியுடன் வழுக்கி செல்லும் மழை துளிகள்


வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து
காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை
இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து
பசி தூண்டும் இட்லி கொப்பரை விசில்
கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
என்று தெரியாமலே கொத்தும் மைனா
அனுமதி இன்றி சன்னலோர இலை ஊடுருவி
என் உடலிலும் படுக்கையிலும் படம் வரையும் சூரிய ஒளி

பின்பகல் நித்திரை களைந்து எட்டி பார்த்தால்
வானத்திற்கு வண்ணம் பூசி அழகாக்கும் சூரியன்
பகல் நேர இரை தேடல் முடிந்து கூட்டமாக
வீடு தேடி செல்லும் பறவை கூட்டங்கள்
ஒற்றை தட்டலில் ஒளிர்ந்து ஊரையே
அழகாக்கும் தெரு விளக்குகள்
தெரு விளக்கில் கோபம் கொண்டு மேற்கு தொடர்ச்சியில்
வேகமாக ஒளியத் துடிக்கும் சூரியன்
காதலனை பார்க்க வரும் முழு நிலவு
பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள்
மேகத்தையும் நிலவையும் கண்ணடித்து
ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள்

இரவையே இசை மயமாக்கும் எங்கிருந்தோ
வரும் பூச்சிகள் எழுப்பும் ஒலி
இப்படி நிரம்பி வழியும் தருணங்களுடன்
காற்றில் கரையும் நாட்பொழுது