கட்டுரைத்தொடர் 2
--------------------------
பசுமைப் புரட்சியின் கதை இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு சங்கீதா ஸ்ரீராம்
---------------------------------------------------------------------------------------------------
விவசாய வாழ்க்கைமுறை வியாபாரமாக மாறியதில் வலுவிழந்தது விவசாயிகள் மட்டுமல்ல. நம் பூமியும்தான். விவசாயக் கழிவுகளையும் மாட்டுச் சாண எருவையும் கொண்டு பூமியின் பசியை ஆற்றி, மழைநீரை கவனமாகச் சேகரித்து பூமியின் தாகத்தைத் தணித்து, மென்மையான கருவிகளைக் கொண்டு உழுது, அன்புடனும் அரவணைப்புடனும் பூமியைப் பாதுகாத்துவந்தான் பாரம்பரிய விவசாயி.
இதற்கு மாறாக, பாரம்பரிய வேளாண் அறிவியல் கோட்பாடுகளை மறந்து, அவற்றை மீறி, மண்ணுக்குப் போதிய உணவளிக்க இயலாமல் பட்டினி போட்டு, வன்மையான கருவிகளைக் கொண்டு பூமியைச் சிதைத்த கதையைக் கேளுங்கள். இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் நிகழ்வுகளுள் சில மட்டுமே இந்தியா முழுவதற்கும் பொதுவாகப் பொருந்தும். வேறு சில, இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழ்ந்தவை.
பயிர் சுழற்சி முறையின் அழிவு
இயற்கை வேளாண்மையின் உயிரினப்பன்மைக் கோட்பாட்டிலிருந்து விலகி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஒரே பணப்பயிரை விளைவிக்கும் புதிய வழக்கம் முளைத்தது. இதனால் பயறு வகைகளைப் பயிரிடும் வழக்கத்திலிருந்து இந்திய விவசாயிகள் விலகத் தொடங்கினர். இந்தப் பயறு வகைகள் காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் சத்தை மண்ணில் பொருத்தும் தன்மை கொண்டவை. இந்தப் போக்குக் குறித்து 1924இல் ஆல்பர்ட் ஹோவார்ட் இவ்வாறு கூறினார்: ". . . கிழக்குப் பஞ்சாபில். . . பணத்தைக் குவிக்கும் கோதுமை, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை ஏற்றுமதிக்காகப் பயிரிடத் தொடங்கியதிலிருந்து, மண் வளத்தைப் பாதுகாக்கும் பயறு வகைகளைப் பயிரிடுவதை விவசாயிகள் மறந்தே போய்விட்டனர்."1 ஆண்டு தோறும் ஒரே பயிர் விளைந்த மண் தனது வளத்தை இழக்கத் தொடங்கியது.
வெளிநாட்டுத் தாவரவினங்களின் அளவுக்கு மீறிய தேவைகள்
நமது உள்ளூர் உயிர்ச்சூழல் அமைப்புக்கு ஒத்துவராத தாவரவகைகள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, முன்பு காணாத நோய்களும் பூச்சிகளும் கூடவே சேர்ந்து அறிமுகமாயின. (சென்ற கட்டுரையில் கூறப்பட்ட கோவை ஆராய்ச்சி நிலையத்தில் அயல்நாட்டுப் பயிரைப் பூச்சிதாக்கிய சம்பவத்தை நினைவுகூரவும்.) சில வகையான வெளிநாட்டுப் பயிர்கள் உள்ளூரில் நிலவிய உயிர்ச் சூழல் அமைப்பின் திறனுக்கு அப்பாற்பட்ட தேவைகளைக் கொண்டவையாக இருந்தன. உதாரணத்திற்கு, வறண்ட நிலத்தில் அதிக நீர்த் தேவையுள்ள (கெட்டியான கரும்பு போன்ற) பயிர்கள் பயிரிடப்பட்டன. இதற்காக, செயற்கையான நீர்ப்பாசன, வாய்க்கால் வசதிகளும் கொண்டுவரப்பட்டன. (இதன் விளைவுகளைப் பின்வரும் கட்டுரையில் பார்ப்போம்.)
எண்ணெய் வித்துக்களின் ஏற்றுமதி
நமது மண்ணிற்கு வளம் சேர்த்த பண்டங்களுள் முக்கியமானது எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்கு. எள், கடுகு, கடலை, பருத்தி போன்ற பல வகையான வித்துக்களிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்தெடுத்த பிறகு மிஞ்சியிருக்கும் சக்கையை மாட்டுக்குத் தீவனமாகக் கொடுத்தும், மண்ணில் கொட்டி உழுதும் ஊட்டச்சத்துக்களின் சம நிலையைப் பராமரித்தும் வந்தனர். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதியான வேளாண் பண்டங்களுள் எண்ணெய் வித்துக்களுக்கு முக்கியமான இடம் உண்டு. "இங்கிலாந்தில் வசிக்கும் நாம், இந்த ஏற்றுமதி ஏற்பாட்டின் அனுகூலங்களை அனுபவிப்பதற்குத் தாமதம் செய்வதே இல்லை. நான் இந்தியா செல்லும் சமயம், வோபர்ன் ஆராய்ச்சிப் பண்ணையில் காளைகளுக்குத் தீவனமாகவும் பயிர்களுக்கு எருவாகவும் பிண்ணாக்கைப் பயன்படுத்தி வந்தேன். இவை பெரும்பாலும், இந்தியாவிலிருந்துதான் வந்திருக்கும்; இவை இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான மண் வளத்துக்குச் சமமாகும்" என்று வோல்கர் கூறியுள்ளார்.2
மாலிசன் என்ற மற்றொரு வேளாண் விஞ்ஞானியின் அறிக்கையின் மூலம் வேறொரு உண்மையும் தெரியவருகிறது: "பாரம்பரிய இந்திய செக்குகள் கொடுக்கும் பிண்ணாக்கு, மிகவும் பொடியாக இருப்பதால் மண் வளத்தை அவை உடனடியாக உயர்த்தின; சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் லீஹ்பீக்ஷீணீuறீவீநீ ஷீவீறீ ஜீக்ஷீமீssகளிலிருந்து வெளியாகும் பிண்ணாக்குக்கு அத்தகைய தன்மை இல்லை."3
இரும்பாலான ஏரின் தாக்கம்
நமது பாரம்பரிய விவசாயக் கருவிகள் பெரும்பாலும் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தன. இதன் அனுகூலங்கள் மூன்று: விவசாயி, மற்றும் நிலத்தை உழும் எருது விரைவில் சோர்வடையவில்லை; மழை பெய்தவுடனேயே மண்ணை உழுவதற்கு ஏற்றதாக அமைந்தது மர ஏர் (இரும்பில் மண் ஒட்டிக்கொண்டு, உழவு வேலையைக் கடினமாகவும் தாமதமாகவும் ஆக்கியது); மண்ணை மேலோட்டமாகக் கீறிவிட்டு, மேல் மண் சேதமடையாமல் பாதுகாத்துவந்தது.
"இந்திய விவசாயி, இந்தப் புதிய கருவியை (இரும்பாலான ஏரை) உபயோகப்படுத்த மறுப்பதை, அவர்களின் 'அறியாமையால் வந்த தவறான எண்ணம்' என்றும் பலரும் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளையும் சூழ்நிலைகளையும் துல்லியமாகத் தீர விசாரித்ததில், நான் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டேன். இங்கிலாந்திலிருந்து இறக்கு மதியாகியிருக்கும் ஏரைக் கொண்டு மண்ணை உழுதால், அது வளமான மண்ணைச் சிதைத்து, நாசமாக்கி விடும்; பயிர் விளைச்சலைக் குறைத்து, நாட்டையே பஞ்சத்திற்குள் தள்ளிவிடும்" என்று ஆங்கிலேய வேளாண் விஞ்ஞானி வாலஸ் தனது அறிக்கையில் எச்சரிக்கை செய்தார்.4
n
வனங்களின் சேதம்
சாண எருவையே பெரிதும் நம்பியிருந்த நமது பூமிக்கு உணவளித்து, இந்திய விவசாயத்தின் மையமாக இருந்துவந்த பசுவுக்கும் உணவளித்தன நம் நாட்டு வனங்கள். இப்படி மண் வளத்தைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், மழை நீரையும் வாங்கிக்கொண்டு, தனது தழைப் படுகைகளிலும், மெல்லிய வேர்ப் பின்னல்களிலும் தக்கவைத்துக் கொண்டு, சிறிது சிறிதாகப் பூமிக்கு அளித்து பூமியின் தாகத்தையும் தணித்துவந்தன.
எங்கும் நிறைந்திருந்த வனங்களைக் கிராமத்து மக்களே பராமரித்துவந்தனர். வனங்களையும் பாதுகாத்து, அவற்றிலிருந்து விறகு, தேன், பழம், மூலிகை போன்ற தமக்குத் தேவையான பொருள்களை வனங்களைப் பாதிக்காத வகையில் எடுத்துக் கொண்டு, அவற்றோடு ஒரு அழகான உறவை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். இங்கிருந்து சேகரித்த மரத்தைக் கொண்டு தங்களுடைய வீடுகளைக் கட்டிக்கொண்டும் விவசாயக் கருவிகளைச் செய்துகொண்டும் வாழ்ந்துவந்தனர். வனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைப் புனிதத்தன்மை கொண்டவையாகப் பாவித்துவந்தனர். சில வனப்பகுதிகளை "sacred groves"களாகவும் பாதுகாத்து வணங்கி வந்த கலாச்சாரம் அது.
தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, ஆங்கிலேய அரசு, 1800களில் வன மேலாண்மையைத் (உண்மையில் அதன் கட்டுப்பாட்டை) தன் கைகளில் எடுத்துக்கொண்டது. முதலில், கிராம மக்கள் வனங்களுக்குச் சென்று கால்நடைகளை மேய விடுவதற்கும் அவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. 1803இல் தான் முதலில் கடல் வர்த்தகத்துக்கான கப்பல்களைக் கட்டுவதற்காக, மலபார் தேக்கு மரங்களை "reserved" என்று அறிவித்து, வெட்டி வீழ்த்தினர். இப்படித் தங்கள் சொந்தத் தேவைகளுக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட காடுகளையே, நாம் இன்றும் "reserved forests" என்று அழைக்கிறோம்! பின்னர், படிப்படியாகக் கட்டடங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்கள் போன்ற பல்வகையான தேவைகளுக்கென மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.5 1866ஆம் ஆண்டு இந்திய அரசு வனத்துறையை நிறுவியது. இதற்கு முன்னரே வனங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டுவிட்டது என்று வோல்கரின் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.
வனத் துறை நிறுவப்பட்டபோது, விலை மதிப்புள்ள மரங்களடர்ந்த வனங்களைப் பாதுகாத்து, அதை வெட்டியெடுத்து ஆங்கிலேயருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இதனால் நமது வேளாண்மையும் அதன் அடிப்படையில் அமைந்த நமது கிராமியப் பொருளாதாரமும் கலாச்சாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதன் பல வகையான, பல தரப்பட்ட விளைவுகளை ஒன்றொன்றாகப் பார்ப்போம்.
சாண விரட்டிகளை எரித்தல்
காட்டில் சேகரித்த விறகுக்கட்டை கிடைக்காததால் மக்கள் மாட்டுச் சாணத்தை விரட்டியாகத் தட்டி எரிக்கத் தொடங்கினர். இவ்வாறு செய்ததனால், மண்ணுக்குப் போய்ச் சேர வேண்டிய எரு இல்லாமல், வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சியது.
"வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்னர், வனங்களும் மேய்ச்சல் நிலங்களும் ஏராளமாக இருந்தபோது, கால்நடைகளும் அதிகமாக இருந்த போது, எரிபொருளுக்குத் தேவையான விறகு மக்களுக்குக் கிடைத்த போது, விவசாய நிலங்களுக்குத் தேவையான எரு அதிகமாகவே கிடைத்துக்கொண்டிருந்தது." என்று வாலஸ், 1887இல் அவருடைய அறிக்கையில் கூறியுள்ளார். " . . . விவசாயிகளில் பெரும்பான்மையோர், அவர்களுக்கு வசதியிருந்தால், சாண விரட்டிகளை எரிக்கமாட்டார்கள். .... விறகு கிடைக்காமல் இருப்பதனால்தான் இவர்களுக்கு இந்த விரட்டிகள் தேவையாகியிருக்கின்றன. இவர்களுக்கு விறகுக் கட்டை மலிவாக, எளிதாகக் கிடைத்துவிட்டால், மண்ணுக்குச் சேர வேண்டிய எரு ஏராளமாகக் கிடைத்துவிடும். கோவை, சேலம், மதுரா, குஜராத், பாம்பே (மாகாணம்), நாதியாத், ஹோஸ்பெட், ஹோஷியார்பூர், முல்தான் போன்ற பல இடங்களில், எந்த விவசாயியும் ஒரு சிறிதளவு சாணத்தைக்கூட எரிபொருளாகப் பயன்படுத்துவதில்லை என்பதை நானே பார்வையிட்டு வந்துள்ளேன். சில இடங்களில், பாலைக் கொதிக்க வைப்பதற்காக மட்டும் சிறிதளவு எரிக்கப்படுகிறது. வடமேற்கு மாகாணம் போன்ற விறகுப் பற்றாக்குறை உள்ள இடங்களில்தான், சாணத்தை எரிப்பது ஒரு பழக்கமாகியுள்ளது" என்று வோல்கர் குறிப்பிட்டுள்ளார்.6
தீவனப் பற்றாக்குறை
கால்நடைகளுக்கெனக் காலம் காலமாகப் பராமரித்துவந்த மேய்ச்சல் வனங்கள் தங்கள் கைகளை விட்டுச் சென்றதன் நேர் விளைவாகத் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டது.
மழை அளவு குறைந்தது
மரங்கள் அழிய மழையும் குறைந்தது. வோல்கர் அவரது அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்: "முந்தைய நாள்களில் climate இப்போது உள்ளதைப் போன்று இருக்கவில்லை என்று பழைய அறிக்கைகள் மற்றும் வர்ணனைகளின் மூலம் தெரியவருகிறது. ஆனால் . . . கவனமில்லாமல், ஒட்டுமொத்தமாக வனங்களையும் மற்ற மரங்கள் அடர்ந்த பகுதிகளையும் . . . அழித்ததன் விளைவாக, climate இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. சர் வில்லியம் டென்னிசன், மதராஸின் ஆளுநராக இருந்தபோது, அவர் சில மாவட்டங்களைப் பார்வையிட்டபோது, வனங்கள் அழிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் மழையளவு குறைந்ததாகக் கூறுகிறார்".7
அதுவரை வனங்களிலிருந்து சேகரித்துவந்த பழங்கள், தேன் போன்ற உணவுப் பொருள்கள் கிடைக்காமல் போயின. அவர்கள் விவசாயக் கருவிகளைச் செய்துகொள்ளத் தேவையான மரம் கிடைக்காமல் போக, அவர்கள் வேலையும் தடைபட்டது. மரங்கள் அழிந்துபோக, வளமான மேல் மண்ணைக் காட்டு வெள்ளங்கள் அரிக்கத் தொடங்கின.
கால்நடை
"ஏம்மா, நேத்து காலைலேருந்து லட்சுமி எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா. சோந்து சோந்து படுத்துக்கறா. வைத்தியரக் கூப்பிட்டு அனுப்பினேனே, வந்து பாத்தாரா?" என்ற பேச்சு கிராமப்புறங்களில் சகஜமாக இடம் பெறும். இங்கு லட்சுமி என்று குறிப்பிடப்படுவது அவர்கள் வீட்டுப் பசு மாடு. வீட்டில் வசித்துவந்த பசு மாட்டைக் குடும்பத்தில் ஒருவராகவே மதித்து, அத்தனை அன்புடன் பாதுகாத்துவந்தார்கள் நம் முன்னோர்கள்.
தீவனம் கிடைக்காமல் மெலிந்து மாண்டுபோனது மட்டுமல்லாமல், கால்நடைகள் கூட்டாகக் கொல்லப்பட்ட விவரங்களைத் தொகுத்து திரு. தரம்பால் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார்.8 இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, 1750களில் தான் பசு வதை அரசாங்கத்தின் பொறுப்பில் நிகழத் தொடங்கியது. நம் நாட்டில் வசித்துவந்த ஆங்கிலேயர் உண்பதற்கான உலர்ந்த இறைச்சி உள்நாட்டிலேயே கிடைக்கத் தொடங்கிய காரணத்தால், அதன் இறக்குமதி 1760இல் நின்றதாம்.
1880 - 94இல் நிகழ்ந்த மாபெரும் பசு வதை எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டிசம்பர் 8, 1893இல் இராணி விக்டோரியா இவ்வாறு எழுதுகிறார்: "இஸ்லாமியர்களை எதிர்த்த போராட்டமாக இது தென்பட்டாலும், உண்மையில் அவர்களைவிடவும் மிக அதிக எண்ணிக்கையில் பசுக்களை வதை செய்யும் நம்மை எதிர்த்த போராட்டமே இது!" 1858இல் ஒரு லட்சம் ஆங்கிலேய இராணுவ வீரர்களுக்கும் அலுவலர்களுக்கும் மேலும் பல லட்சக்கணக்கான சிவில் அதிகாரிகளுக்கும் தினம் தினம் மாட்டிறைச்சியை வழங்குவதற்கெனத் தொடங்கப்பட்ட திட்டம் இது. மேலும், இராணுவப் பிரயாண மூட்டைகள், ஆயுதங்கள் ஆகியவற்றை நெடுந் தொலைவுகள் சுமந்து கொண்டு போவதற்காக, விவசாய நிலங்களை உழுதுகொண்டிருந்த எருதுகளை இழுத்து வந்தனர்.
நீர் வளங்கள் வற்றிப்போன கதையையும் புதிய கால்வாய்களால் விளைநிலங்கள் மலடான கதையையும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
1. Howard, Albert, Crop Production in India: A critical survey of its problems, 1924, Pg. 37. 2. Voelcker, John Augustus, Report on the Improvement of Indian Agriculture, 1893, Pg. 106.3. Mollison, J., A Textbook on Indian Agriculture, 1901, Vol 1; pg.122-3.4. Wallace, Robert, India In 1888, Pg. 174-5.5. PPST-Madras Group, Indian Agriculture at the Turn of the Century; PPST Bulletin, Vol.2, No.1.6. Voelcker, John Augustus, Report on the Improvement of Indian Agriculture, 1893, Pg.100-101.7. Ibid., Pg. 30-310.8. Dharampal, Mukundan, T.M., The British Origin of Cow-Slaughter in India: with some British Documents on the Anti-Kine-Killing Movement 1880-1894, Society for Integrated Development of Himalayas, Mussoorie, July 2002.
தகவலுக்கு நன்றி
http://www.kalachuvadu.com/issue-101/page44.asp
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
No comments:
Post a Comment