கட்டுரைத் தொடர்
பசுமைப் புரட்சியின் கதை சங்கீதா ஸ்ரீராம்
ஏற்கனவே வரிக் கொடுமைகளுக்கு ஆளாகி வலுவிழந்த விவசாயிகள், என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதுகூட இனி அவர்கள் கைகளில் இல்லை. தானியங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களை வகைவகையாய்க் கண்டறிந்து பயிர் செய்தவர்கள், இனித் தங்கள் உபயோகத்திற்காக அல்லாமல் ஆங்கிலேயருக்கு லாபம் ஈட்டித் தரும் பயிர்களை விளைவிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். ஒரு ஏக்கர் நிலத்தில்கூடப் பல வகையான உணவுப் பயிர்களையும் மற்ற உபயோகமுள்ள பயிர்களையும் சேர்த்துப் பயிரிட்டு, ஆரோக்கியமான விவசாயம் செய்துவந்த காலம் சென்று, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டு, பணப்பயிர் தோட்டங்களாக மாற்றியமைக்கும் பணி 18ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமானது. பணப்பயிர் அறிமுகமாகி, நம் விவசாயிகளையும் விவசாயத்தையும் திசை திரும்பச் செய்த கதைகளைப் பொறுமையாகப் படித்துப் பார்த்தால், அவற்றுக்கும் பசுமைப் புரட்சிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது விளங்கும்.
n n n
அபினி
முதன்முதலில் இங்கிலாந்துக்குத் தேநீர் அறிமுகமானது 1650களில்தான்.1 விலையுயர்ந்த, பணக்காரர்களின் பானம் என்று அறிமுகமாகி, நூறாண்டுகளில் படிப்படியாக அனைத்து மக்களும் விரும்பி அருந்தும் பானமாக மாறியது. முதலில், தேயிலை சீன நாட்டிலிருந்துதான் இறக்குமதியானது. இங்கிலாந்துக்கு வேண்டிய பொருள் சீனாவில். ஆனால், சீனாவுக்குத் தேவையான பொருள் ஆங்கிலேயரிடம் எதுவுமில்லாததால், தங்கக் கட்டிகளையும் வெள்ளிக் கட்டிகளையும் கொண்டே தேயிலையை வாங்கிவந்தது. எத்தனை காலந்தான் இப்படித் தங்களுடைய கருவூலத்தைத் தீர்த்துக்கொண்டிருப்பது என்றெண்ணிய ஆங்கிலேயருக்கு ஒரு யோசனை. சீனாவில் மெதுவாகப் பரவிவந்த அபினி போதை மருந்தை இந்தியாவின் வளமிக்க கங்கை முகத்துவாரத்தில் விளைவித்து, சீன மக்களை அதற்கு அடிமையாக்கி, அவர்களிடம் விற்று, அதற்கு மாற்றாகத் தேயிலையை வாங்கிக்கொள்வதுதான் அது.2 அப்போது தங்கள் வயப்பட்டிருந்த வங்காளத்தின் விவசாயிகளையெல்லாம் பலவந்தமாக அபினியைப் பயிர்செய்யவைத்தது கிழக்கிந்தியக் கம்பெனி. தங்கள் உணவுக்காகக் காய்கறிகள் விளைவிப்பதைக்கூடத் தடைசெய்து, ஒத்துழைக்க மறுத்த விவசாயிகளுக்குத் தண்டனைகளை அளித்தது. இவ்வாறெல்லாம் கிடைத்த அபினியை 1773ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலில் சீனாவில் கொண்டு இறக்கியது. விவசாயிகள் கம்பெனிக்கு ஒப்பந் தங்களின் மூலம் உறுதியளித்த எண்ணிக்கையைவிடக் குறைந்த ஒவ்வொரு பெட்டிக்கும் ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது.
23 ஆண்டுகள்3 கழிந்து, சீனர்களெல்லாம் இந்தப் போதைக்கு அடிமையாகி, நாடே பாதிப்படைந்ததைக் கண்ட ஏகாதிபத்திய அரசுகூட, இதன் இறக்குமதிக்குத் தடை விதித்தது. இருந்தும் கள்ளத்தனமாகக் கடத்தியே அபினிக்கான சந்தையைத் தக்கவைத்துக்கொண்டனர் ஆங்கிலேயர். 1905-06இல், 6.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் அபினி பயிராகியிருந்தது. இதில் 4 லட்சம் ஆக்ராவிலும் வங்காளத்திலும் மட்டுமே இருந்தது.4
இண்டிகோ (அவுரி)
பல நூற்றாண்டுகளாக, இந்தியாவிற்கே உரிய நீலச் சாயப்பொருளான இண்டிகோவைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், 1750களில் இங்கிலாந்து ஆலைகளில் டன் கணக்கில் உற்பத்தியான பருத்தித் துணிகளுக்காக இண்டிகோ சாயம் அதிக அளவுகளில் தேவைப்பட்டது. அதுவரையில் இண்டிகோ வழங்கி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள், அரசியல் காரணங்களால் தனது ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்ட பின், இந்தியாவில் விளைவிப்பது அவசியமானது. வங்காள விவசாயிகள்தான் மீண்டும் கையில் சிக்கினர்.5
உணவுப் பயிருக்குப் பதிலாக இண்டிகோவைப் பயிர்செய்யப் பலவந்தமாக வற்புறுத்தி, அபினிக் கதையைப் போலவே விவசாயிகளின்மேல் பல கொடுமைகளை இழைத்துத் தங்கள் சொந்த லாபத்துக்காக விளைச்சலைப் பெருக்கிக்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில், வங்காளம் உலகிலேயே மிகப்பெரிய இண்டிகோ உற்பத்தியாளர் என்ற அளவுக்கு இந்தப் பயிர் பரவலாக்கப்பட்டது!
வங்காளத்தில் ஃபரித்பூரின் நீதிபதியான ஆங்கிலேயர் இ.டி. லதூர், 1848இல் இவ்வாறு கூறினார்: "இங்கிலாந்தில் வந்திறங்கும் ஒவ்வொரு இண்டிகோ பெட்டியின் மேலும், மனித இரத்தக் கறை படிந்திருக்கிறது.... நீதிபதி என்ற தகுதியில் என்னிடம் அனுப்பப்படும் பல விவசாயிகளின் உடல்களில் ஈட்டிகள் பாய்ச்சப்பட்டிருக்கின்றன; தோட்ட முதலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.... இவ்வாறு இண்டிகோ வர்த்தகத்தை மேற்கொள்வது, ரத்தம் சிந்தவைக்கும் கொடூரமான முறை என்றே கருதுகிறேன்."6
நிலைமை மிகவும் மோசமானதும் 1868ஆம் ஆண்டு இண்டிகோ கலவரங்கள் வெடித்தன. அதே சமயம், 1880இல், இரசாயன நீலச்சாயம் உற்பத்திசெய்யும் முறை கண்டறியப்பட்ட பிறகு, இண்டிகோவின் தேவை சரிந்தது; நம்பியிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரங்களும் கூடவே சரிந்தன. 1895-96இல் வங்காளத்தில் 16 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிராகிய இண்டிகோ, 1905-06இல் 5 லட்சம் ஏக்கராகவும் பின்னர் மேலும் சுருங்கியது.7 பல இண்டிகோ தோட்டத்தொழிலாளிகள் வறுமையில் வாடி மடிந்தனர்.
தேயிலை
ஆங்கிலேயர் இந்தியாவின் பிற பகுதிகளையும் கைப்பற்ற, தங்களுக்குத் தேவையான தேயிலையையும் இங்கேயே விளைவிக்கலாமே என்றெண்ணினர். 1835இல் அஸ்ஸாமில் முதல் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டு, மூன்றாண்டுகளில் லண்டனில் விற்பதற்கான முதல் இந்தியத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது.8 ஆங்கிலேய அரசாங்கம் உருவாக்கிய தரிசு நில விதிகளின்படி, வடக்கிந்தியக் காடுகள் (குறைந்த பட்சம் 100 ஏக்கரும் அதிக பட்சம் 3,000 ஏக்கரும்) "தரிசு நிலம்" என்னும் பெயரில் 45 ஆண்டுகளுக்கு (வரிவிலக்குடன்) குத்தகைக்கு விடப்பட்டன. 9இவ்வளவு பணம் கொடுத்து ஆங்கிலேயரால் மட்டுமே இதனை வாங்க முடிந்தது. இந்தத் தேயிலை எஸ்டேட்டுகளில் பணிக்குச் சேர்க்கப்பட்ட விவசாயிகள் சந்தித்தக் கொடுமைகள், இண்டிகோ, அபினித் தோட்டங்களில் சந்தித்ததைவிட மிகப் பயங்கரமாக இருந்தன. விவசாயிகள் வாழ்நாள் அடிமைகளாக்கப்பட்டு, மிக மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து மடிந்தனர். 1905இல் 5 லட்சம் ஏக்கர் காடுகள் அழிந்து, தேயிலை எஸ்டேட்டுகளாக உருமாறி நின்றன!10
காப்பி
1690வரையில் அரேபிய மற்றும் அபிசினிய (இன்றைய எத்தியோப்பியா) நாடுகளில் மட்டுமே பயிராகிவந்தது காப்பி. அதன்பிறகு தேநீரைப் போலவே படிப்படியாக மக்களை அடிமையாக்கிய காப்பிக்கு உலகெங்கிலும் தேவை அதிகமாகியது. 1830இல் மைசூர் மாநிலத்தில் முதன்முதலில் காப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டு, 1846இல் தமிழ்நாட்டில் நீலகிரி மலையிலும் பயிர் செய்யப்பட்டது. ஆரம்ப காலங்களில் பயிர்செய்யப்பட்ட பெரும்பான்மையான காப்பியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. சிறிதளவு இந்தியாவில் வசித்துவந்த ஐரோப்பியர்கள் மட்டும் அருந்தினர். பிறகு, 1900களில் தென்னிந்தியாவில் பிராமணர்களின் பானமாகக் காப்பி அறிமுகமானது. காப்பியும் அருந்துபவரைத் தனக்கு அடிமையாக்கும் காரணத்தால், ஆரம்ப காலங்களில் பழமைவாத பிராமணர்கள் இந்தப் பானத்தை மதுவுடன் ஒப்பிட்டு எதிர்த்துவந்தனர். "வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஏற்ற பானம்" என்று விளம்பரம் செய்து வெற்றி கண்ட கம்பெனிகள், இரகசியமாக அருந்தப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் பானம், கௌரவத்துக்குரிய ஒரு பானமாக உயரக் காரணமானார்கள்.11 படிப்படியாக, காப்பி உற்பத்தியில் 50% நம் நாட்டிலேயே விற்பனையும் ஆனது. 1895இல் 2.7 லட்சம் ஏக்கரில் பயிரான காப்பிப் பயிரானது12, இன்று கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கர் காட்டு நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது!13
புகையிலை
400 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புகையிலை என்னும் தாவரத்தைப் பற்றிய குறிப்பு எங்குமே இல்லை! முகலாய மன்னர்கள்தான் முதன்முதலில் இந்தப் போதைப் பொருளை உபயோகிக்கத் தொடங்கினர். 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பயிராகத் தொடங்கி, கோவா மூலம் போர்த்துக்கீசியரால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, உள்நாட்டிலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் காலகட்டம் வரையில், உடல்நலக்கேட்டின் காரணமாக, இங்கிலாந்திலும் இந்தியாவிலும் புகையிலையைப் பயிர்செய்வதற்கும் புகைபிடிப்பதற்கும் பலவகையான தடைகள் போடப்பட்டன; அபராதங்கள் விதிக்கப்பட்டன. அவையனைத்தையும் மீறி 1800ஆம் ஆண்டுக்கு மேல்தான் இவ்விரு நாட்டு மக்களிடமும் பிரபலமாகத் தொடங்கியது. 1905இல் இந்தியா முழுவதிலும் 11 லட்சம் ஏக்கரில் பயிரானது புகையிலை.14
n n n
மேலும், இங்கிலாந்தில் தொழிற்புரட்சியை அமோகமாகத் தொடங்கி ஆலைகளை நிறுவியதும் மக்களை இந்த ஆலைகளை இயக்கத் தயார்செய்ததும் "அடடா! இப்போது மூலப்பொருள் வேண்டுமே!" எனக் கூறிக்கொண்டே இந்தியா உட்படப் பல நாடுகளைத் திரும்பிப் பார்த்தது இங்கிலாந்து. இந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளின் பசியை ஆற்ற வேண்டி, கோடிக்கணக்கான ஏக்கர் உணவுப் பயிர் நிலங்களையும் காடுகளையும் வளைத்துப் போட்டு, ஏற்கனவே வியாபாரமான வாழ்க்கை முறையாம் விவசாயத்தை, இன்னும் தீவிரமான வியாபாரமாக மாற்றியது!
பருத்தி
எண்ணிலடங்கா வகைகளிலும் வண்ணங்களிலும் நெய்யப்பட்ட இந்தியப் பருத்தித் துணி, காலங்காலமாகவே இங்கிலாந்து உட்படப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இங்கிலாந்தில் பருத்தி விளையாததால், கம்பளியைக் கொண்டே அவர்கள் ஆடைகளைத் தயாரித்துவந்தனர். இதனால், இந்தியப் பருத்திக்கு அங்கு நல்ல மரியாதை இருந்துவந்தது. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி வேரூன்றியதும் தமக்கென ஆலைகளை உருவாக்கிக்கொண்டுவிட்ட பின், இனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை இறக்குமதி செய்வானேன் என்றெண்ணி, தங்கள் நாட்டில், இந்தியப் பருத்தித் துணி விற்பனைக்குத் தடை விதித்தனர். அதோடு நிற்காமல், தங்கள் ஆலைகளுக்குத் தேவையான பருத்தியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவும் முடிவுசெய்தனர். ஏற்கனவே, தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளிலிருந்து பருத்தி இறக்குமதி ஆகிக் கொண்டிருந்தது.15
இந்தியாவில் காலங்காலமாக விளைந்த பருத்தி ரகங்களில் பெரும்பான்மையானவை, குட்டையான நாரைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இங்கிலாந்து ஆலைகள் நீள ரகப் பருத்திக்கு மட்டுமே ஏற்றவையாக இருந்தன. இதனால், 1830இலிருந்து ஆங்கிலேயர் தொடர்ந்து இந்தப் புதிய ரகத்தை இந்திய விவசாயிகளிடையே பரவலாக்க முயன்றனர். அதன் விளைவு என்ன என்பதை வோல்கர் அவரது அறிக்கையில் இவ்வாறு எழுதுகிறார்: "மிருதுவான ரகப் பருத்தியைப் பரவலாக்க, அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்திய சொரசொரப்பான ரகப் பருத்தியைப் பயிர் செய்வதைத் தடுக்கச் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகூட எடுத்துள்ளது. ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துள்ளன. பார்க்கப் போனால், முன்பைவிட இன்னும் அதிகமாகவே விவசாயிகள் இந்திய ரகப் பருத்தியைப் பயிர் செய்கின்றனர். இதற்கான காரணங்களைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நீள ரகப் பருத்தியைவிட, நாட்டு ரகப் பருத்தி அதிக மகசூல் தந்து, விரைவிலேயே அறுவடைக்கு வந்து, அதிக வலிமையும் வாய்ந்ததாக இருக்கிறது."16
1860களில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் சமயத்தில், அமெரிக்காவிலிருந்து நீள ரகப் பருத்தியின் இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டதால், இந்தியாவில் அமெரிக்கப் பருத்தியைப் பயிர்செய்த விவசாயிகளுக்குப் பரிசுகளையும் பதக்கங்களையும் வாரி வழங்கி அவர்களை ஊக்குவித்தது அரசாங்கம். வருமானமும் பணமும் அதிகம் கிடைத்ததால், விவசாயிகளும் இந்த மாற்றத்துக்கு இணங்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஓய்ந்ததும் இந்தியப் பருத்தியின் தேவையும் அதனுடனே விலையும் சரிந்தது. ஏற்றுமதியை நம்பி, அதிக பராமரிப்புடன் குறைந்த விளைச்சல் தந்த நீள ரகப் பருத்தியைப் பயிர்செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், வரிப்பணத்தைக்கூடக் கட்ட இயலாத பருத்தி விவசாயிகள், கடன்காரர்களின் கைகளில் சிக்கிக் கொண்டு, அவர்கள் வலுவடையக் காரணமானார்கள். பிறகு இந்தியாவிலேயே பருத்தி ஆலைகள் பரவலாக நிறுவப்பட்டதும் மறுபடியும் இந்த நீள ரகப் பருத்திக்குத் தேவை அதிகரித்தது. விவசாயிகள், படிப்படியாகப் பாரம்பரிய குட்டை ரகங்களைப் பயிர்செய்வதைக் கைவிடத் தொடங்கினர்.
1841இல் கோவை ஆராய்ச்சி நிலையத்தில் நிகழ்ந்த பரிசோதனையில், அமெரிக்க ரகப் பருத்தியைப் பூச்சி தாக்கிப் பயிரெல்லாம் அழிந்ததென்பதும் அருகிலேயே பயிரான இந்தியக் குட்டை ரகம் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் செழிப்பாக விளைந்ததென்பதும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று.17
கரும்பு
வேத காலம் தொட்டு, இந்தியாவில் கரும்பு ஒரு முக்கியமான உணவுப் பொருளாக இருந்துவந்து, இங்கிருந்து உலகின் மற்ற நாடுகளுக்கெல்லாம் பரவியிருக்கிறது. இந்தியாவில் முக்கியமாக இரண்டு வகையான கரும்பு பயிரானது. இனிப்புத் தன்மை அதிகம் நிறைந்த, மெலிந்த வகைக் கரும்புப் பயிர் நீர்ப்பாசனத்துக்குத் தேவையே இல்லாமல் விளைச்சலைக் கொடுத்தது. அதிக அளவில் பயிரிடப்பட்ட இந்த வகை, வெல்லம் மற்றும் சர்க்கரை உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்பட்டது. குறைந்த இனிப்புத் தன்மை வாய்ந்த, கெட்டியான கரும்பு வகை, மெலிந்த வகையைவிட அதிக விளைச்சல் கொடுத்தாலும் அதற்கு அதிக அளவில் நீர்ப்பாசனம் தேவையாக இருந்தது. இது கடித்துச் சுவைக்க மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டது.18
லெதர் என்ற ஆங்கிலேயர் ஒருவர், நம் நாட்டு வகைக் கரும்பைப் பற்றிக் கூறுகையில் "மெட்ராஸ் மாகாணத்தில் தற்போது பயிராகும் கரும்பு, உலகிலேயே மிகச்சிறந்த ரகம் என்பதில் சந்தேகமேயில்லை" என்று புகழ்ந்து கூறியுள்ளார்.19 இப்படிப்பட்ட தரம் வாய்ந்த கரும்பு பயிரான இடங்களில், அதிக விளைச்சல் வேண்டும் என்கிற ஒரே காரணத்தினால், வெளிநாடுகளிலிருந்து சர்க்கரை ஆலைகளுக்கு ஏற்ற மற்ற கெட்டியான ரகங்களைக் கொண்டுவந்து, நீர்ப்பாசனம் அதிக அளவில் தேவைப்பட்ட புதிய கலப்பு ரகங்களை அறிமுகப்படுத்தினர் ஆங்கிலேயர். 1940இல் 42 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரானது.20
தைல மரம்
1843இல் நீலகிரி மலைகளில் விறகுத் தேவைக்காக அறிமுகமாகி, பின்னர் காகித ஆலைகளில் மூலப் பொருளுக்காக விரைவில் வளரக்கூடிய மரமாக நாடெங்கும் பரவியது. தைல மரம் பயிர் செய்வதற்காகப் பல லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளும் உணவுப் பயிர்ப் பண்ணைகளும் அழிந்தன. சுழற்சி விவசாயத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்தனர்.21
இது போன்று ரப்பர், எண்ணெய் வித்துக்கள், வேர்க்கடலை, சணல் போன்ற மற்ற பயிர்களும் இவ்வாறே ஆங்கிலேய ஆலைகளுக்குத் தீனி போட நாடெங்கிலும் பரவலாகப் பயிர் செய்யப்பட்டன.
n n n
விளைவுகள்
'விவசாயம் என்றாலே, சந்தைக்காகத்தான்; பணம் பண்ணத்தான்' என்றாகியுள்ள இன்றைய சூழலில், இங்குக் கூறியுள்ள கதைகளில், ஆங்கிலேய ஆதிக்கம் என்ற ஒன்றை மட்டும் அகற்றிவிட்டால், நம்மில் பலருக்கு எல்லாமும் சரியாக இருப்பதாகத் தெரியலாம். ஆனால், இந்த மாற்றங்கள்தாம், நம் நாட்டு இன்றைய விவசாய நெருக்கடிக்கு அடித்தளமாக அமைந்தன என்கிற உண்மை, இனி வரும் கட்டுரைகளில் மேலும் தெளிவாக விளங்கும்.
இப்போதைக்குச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்றால், உணவுப் பயிர்களுக்குப் பதிலாக, அபினி போன்ற பணப்பயிர்களை விளைவித்து உணவு உற்பத்தி குறையத் தொடங்கியது. பணப்பயிரின் நிலப்பரப்பு 1900இல் 165 லட்சம் ஏக்கரிலிருந்து, 1930இல் 240 லட்சம் ஏக்கராக அதிகரித்தது.22 அதிலும், வளமான உணவுப்பயிர் நிலங்களைப் பணப்பயிருக்கு மாற்றி, லாபத்தை எவ்வளவு பெருக்கிக்கொள்ளலாம் என்கிறபடியெல்லாம் எண்ணிச் செயல்படத் தொடங்கினர். வோல்கர் கூறுவதைப் பாருங்கள்: "திரு. நிகல்சன் கூறுவதன்படி கோவையில், பத்தாயிரக்கணக்கான ஏக்கர் வளமான நிலத்தில், ஏக்கருக்கு ரூ.20 செலவில், ரூ.40 வருமானம் தரும் உணவுப் பயிரை விளைவிக்கிறார்கள். ஆனால், அதே நிலத்தில், ஏக்கருக்கு ரூ. 150வரை வருமானத்தை ஈட்டித் தரும் கரும்பு மற்றும் வாழை போன்ற பயிர்கள் அருமையாக விளையுமே."23
தங்கள் சொந்த உபயோகத்திற்காகவும் உள்ளூர்ச் சந்தைக்காகவும் பல பயிர்கள் ஒன்றாக விளைந்த நிலங்களை, இண்டிகோ போன்ற ஓரினப்பயிர் தோட்டங்களாக மாற்றி, அயல்நாட்டுச் சந்தையை மட்டும் நம்பியிருந்து, நிலையாக இருந்த உள்ளூர்ப் பொருளாதாரத்தை நிலைகுலைக்கத் தொடங்கினர். மொத்த உற்பத்தியையும் வாங்கிக்கொள்வதாக வாக்களித்து, விவசாயிகளைக் கரும்புப் பயிருக்கு மாற்றிவிடும் சர்க்கரை ஆலை முதலாளிகள்; பின்னர் ஏமாற்றமடைந்த விவசாயிகள், அறுவடைக்குக்கூடக் காசில்லாமல் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரும்புப் பயிரை எரித்துத் தள்ளும் செய்தி, அடிக்கடி நம் செய்தித்தாள்களில் காண்கிறோமே, அதனுடைய தொடக்கந்தான் இது.
சுதந்திரமாகச் செயல்பட்டுவந்த விவசாயிகள், தேயிலை போன்ற பயிர்தோட்டத் தொழிலாளிகளாக மாறினர். காப்பி போன்ற அடிமையாக்கும் பானங்களையுங்கூட, மக்களின் கௌரவத்தை உயர்த்தும் பானமாகக் காட்டி, விளம்பரங்களின் மூலம் தனியாரின் லாபத்திற்காக மக்களை மயக்கும் தந்திரங்க ளெல்லாம் கண்டறியப்பட்டன. மக்களின் உடல் நலத்தைக் கெடுக்கும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் பெரிய அளவுகளில் புழக்கத்தில் வந்தன.
பல நூற்றாண்டுகளாக நம் நாட்டு மண்ணுக்கும் இயற்கைச் சூழலுக்கும் ஏற்றவாறு விளைந்துவந்த குட்டை ரகப் பருத்தி போன்ற பயிர் வகைகள் அழிந்து, பெரிய ஆலைகளின் பசியை ஆற்றுவதற்கென அமெரிக்கப் பருத்தி போன்ற பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாம் ஒட்டுமொத்தமாக ஆலைகளுக்காக அமெரிக்க ரகப் பருத்திக்கு மாறியதிலிருந்துதான், இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் தேவை அதிகரித்தது. இன்று, நம் நாட்டில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் கிட்டத்தட்ட 60%, வெறும் பருத்திப் பயிருக்கு மட்டுமேயான அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இதேபோல், ஆலைகளுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட கெட்டியான கரும்பு ரகம், காலங்காலமாகச் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலத்தடி நீரை உறிஞ்சி, தீர்க்கத் தொடங்கியது. உதாரணத்திற்கு, 1999ஆம் ஆண்டு, மஹாராஷ்டிர மாநிலத்தில் பயிர் செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பில், 2.5% மட்டுமே கரும்பு பயிரானது. ஆனால், அந்த மாநிலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட மொத்த நீர்ப்பாசனத்தில் 60% வெறும் கரும்புக்கு மட்டுமேயாம்!24
இதுமட்டுமல்லாது, ஏற்கனவே வலுவிழந்துவந்த விவசாயிக்குப் புதிய உத்திகளைக் கையாள உற்சாகம் குறைந்து, தன் விவசாய அறிவைத் தேக்கிக்கொள்ளத் தொடங்கினான். தமக்கும் பயிருக்கும் சிறிதும் தொடர்பே இல்லாத, அனுபவ அறிவு இல்லாத புதிய ஓரினப் பயிர்களை விளைவிக்கும் போக்கில், நம் பாரம்பரிய விவசாயத்திற்கே உரிய கலப்புப் பயிர், பாரம்பரிய விதைப் பாதுகாப்பு போன்ற பல சிறந்த உத்திகளையும் செயல்முறைகளையும் பற்றி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சேகரித்துவைத்திருந்த அறிவையும் சிறிது சிறிதாக மறந்துபோகத் தொடங்கினான். இந்தக் காரணங்களினால், பணப்பயிர் பயிரிட்ட விவசாய நிலமெல்லாம் தனது வளத்தையும் இழக்கத் தொடங்கியது. (விவரங்கள் பின்வரும் கட்டுரைகளில்)
மேற்கண்ட கதைகளில் அடிப்படை மாற்றங்களை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்தான் என்றாலும், இவை தீவிரமானதில் நம் விவசாயிக்கும் பெரும் பங்குண்டு. இதுவரையில் நம் பொருளாதாரம் எனும் இயந்திரம் இயங்குவதற்கு ஒரு கருவியாக மட்டுமே பயன்பட்ட பணம், விரைவாக நம் விவசாயிகளின் எசமானனாக மாறி, பணம் சம்பாதிக்கும் ஒரே காரணத்துக்காக ஆலைகளுக்கான பயிர்களை விளைவிக்கும் விபரீதப் பாதையில் அடியெடுத்து வைத்தான் விவசாயி.
உதவிய நூல்கள்
1. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 2122. Alvares, Claude Alphonso; Decolonising History; The Other India Press, Goa; 1980 / 1993 pg. 147.3. ibid; pg 147.4. Sir George Watt; The Commercial Products of India; Today and Tomorrow's Printers and Publishers, New Delhi; 1908/66; pg 848, 8515. ibid; pg.6696. MD. Afroz Alam; Champaran: Mantra for Non-violence; 1998;
தகவலுக்கு நன்றி
http://www.kalachuvadu.com/issue-99/page22.asp
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
No comments:
Post a Comment