
அதன் பின்பு அவருடைய நெடுங்குருதி நாவல் பற்றி நிறைய பேர் சொன்னதும் , இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி படித்து முடித்தேன் .
நெடுங்குருதி வேம்பலை என்னும் கற்பனை கிராமத்தில் வாழும் வேம்பர்கள் பற்றிய கற்பனை கதை . வேம்பர்கள் வெள்ளையர்களின் காலத்தில் குற்ற பரம்பரை சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டவர்கள் .
குற்ற பரம்பரை சட்டம் என்பது என்ன என்றால் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களால் சந்தேகிக்கப்படும் மக்களின் பெரு விரல் கை ரேகையை பதிந்து சென்று விடுவார்கள் .இப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் இரவு நேரங்களில் கச்சேரி என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மாடுகள் அடைத்து வைக்கப்படும் இடம் போன்ற ஒரு இடத்திற்கு மாலை 6 மணி ஆனதும் இந்த மக்கள் சென்று விட வேண்டும் .கச்சேரியில் இருப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது .கச்சேரியில் தூங்க இடம் இருக்காது . இரவு முழுவதும் உட்கார்ந்தபடியே தான் இருக்க வேண்டும் . விடியும் வரை அங்கே இருந்து தான் அந்த இரவில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் தான் வாழ்நாள் முழுவதும் . இந்த சட்டத்தால் 15 வயது முதல் உள்ள ஆண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் கச்சேரியில் அடைந்து மானம் இழந்து வாழ விரும்பாமல் தான் பெரு விரலை வெட்டி கொண்டவர்கள் நிறைய பேருண்டு .அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அந்த சட்டத்தை தூக்க செய்தனர் .

முதலில் நெடுங்குருதி படிக்க ஆரம்பித்தும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சென்றது . சில பக்கங்கள் வாசிச்சதும் கதை தான் ஓட்டத்தின் வழியே இழுத்து சென்றது .நானும் ஆற்று தண்ணிரில் அடிது செல்லப்படும் இல்லை போன்று அதன் கூடவே சென்றேன் . இது வேம்பலையில் வாழும் நாகு குடும்பம் மற்றும் நாகுவை சுற்றியே வருகிறது . வேம்பலை போன்ற ஒரு வெயிலின் வெக்கை ஆட்சி செய்யும் கிராமத்தின் கதையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது .
வேம்பர்கள் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தால் அடக்கப்படுகிறார்கள் அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற விடயங்கள் நம்மை 70 வருடங்களுக்கு பின்னாலே இழுத்து செல்கிறது .
கிராமங்களுக்கே உரிய முயல் வேட்டை பற்றிய பகுதிகள் சிறு வயதில் நான் முயல் வேட்டைக்கு சென்றதை நினைவுப்படுத்தியது .
இப்படி விறுவிறுப்பாக செல்லும் நாவல் அடுத்த தலைமுறையினர் குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது . நாவலின் இறுதி பகுதிகள் நாவலை எப்படியாவது முடிக்க வேண்டும் என சவ்வு மாதிரி இழுக்கப்பட்டு திடீர் என்று முடிக்கப்பட்டது போல் உள்ளது .
இந்த நாவலின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேம்பலை தன் மக்களின் குருதியை ருசி பார்த்துகொண்டே இருக்கிறது .பொதுவாக சிறு நிலங்களின் வரலாறுகள் பதிவு செய்யப்படுவது இல்லை . அப்படி பதிவு செய்தது பல விடயங்களை வெளிக்கொண்டு வந்து உள்ளது இந்த நாவல் . எப்படி இருப்பினும் நெடுங்குருதி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு பற்றி தமிழ் எழுத்து உலகில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று .